டெல்லி நீதிபதி வீட்டின் அருகே தீயில் கருகிய ரூபாய் நோட்டுகள்!

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்தில் எரிந்த ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

Judge cash row: Burnt pieces of Rs 500 notes 'found' near Justice Yashwant Varma's residence sgb

மார்ச் 14 அன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டுகளை விவரிக்கும் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது உச்ச நீதிமன்றம் இதற்கு முன் எப்போதும் எடுக்காத நடவடிக்கையாகும். நீதிபதியின் வீட்டு  வளாகத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட எரிந்த ரூபாய் நோட்டுகளின் வீடியோக்கள் ஆன்லைனில் வெளியாகி வைரலாகியுள்ளன. அப்பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளியான இந்தரஜித், குப்பைகளைச் சேகரிக்கும்போது எரிந்த 500 ரூபாய் நோட்டுகளின் துண்டுகளைக் கண்டெடுத்ததாகக் கூறினார்.

Latest Videos

கேரள பாஜக தலைவராகிறார் முன்னாள் மத்திய அமைச்சர், தொழிலதிபர் ராஜீவ் சந்திரசேகர்

துப்புரவுத் தொழிலாளர்கள் வாக்குமூலம்:

சில நாட்களுக்கு முன்பும் இதே போல எரிந்த ரூபாய் நோட்டுகளைக் கண்டதாகக் கூறிய அவர், தீப்பற்றியது எப்படி, எங்கிருந்து வந்தது என்பது குறித்துத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

"நாங்கள் இந்தப் பகுதியில்தான் வேலை செய்கிறோம். சாலைகளில் இருந்து குப்பைகளை சேகரிக்கிறோம். 4-5 நாட்களுக்கு முன்பு நாங்கள் இங்கு குப்பைகளைச் சேகரித்துக்கொண்டிருந்தோம், அப்போது எரிந்த 500 ரூபாய் நோட்டுகளின் சில துண்டுகளைக் கண்டோம். இப்போது மீண்டும் ஓரிரு துண்டுகளைக் கண்டுபிடித்துள்ளோம்... எங்கு தீ விபத்து ஏற்பட்டது என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் செய்வதெல்லாம் குப்பைகளைச் சேகரிப்பது மட்டும்தான்" என்று அவர் கூறினார்.

மற்றொரு துப்புரவுத் தொழிலாளியான சுரேந்தர் கூறுகையில், "நாங்கள் குப்பை வண்டிகளுடன் இங்கு வந்து வேலை செய்கிறோம். குப்பைகளைச் சேகரிக்கிறோம். எரிந்த 500 ரூபாய் நோட்டுகளைக் கண்டுபிடித்து 4-5 நாட்கள் ஆகிறது. இப்போது இன்னும் சில துண்டுகளைக் கண்டுபிடித்திருக்கிறோம்..." என்றார்.

உச்ச நீதிமன்றத்தின் அறிக்கை:

உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், சேமிப்பு அறையாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வெளிப்புறக் கிடங்கில் நான்கு முதல் ஐந்து மூட்டை எரிந்த ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. நீதிபதியின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பணம் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

சம்பவத்தின்போது அங்கு இல்லாத நீதிபதி யஷ்வந்த் வர்மா, எந்தத் தவறும் செய்யவில்லை என்று கடுமையாக மறுத்துள்ளார், தானோ அல்லது தனது குடும்பத்தினரோ அந்த அறையில் பணத்தைச் சேமித்து வைக்கவில்லை என்று வலியுறுத்தியிருக்கிறார்.

எரிந்த பண மூட்டைகளைக் காட்டும் வீடியோவை உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா, தன்மீது அவதூறு பரப்புவதற்காக சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

மார்ச் 22 ஆம் தேதி வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில், தீப்பற்றிய இடத்தில் தீயணைப்பு நடவடிக்கைகள் நடைபெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன.

டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா, ரூபாய் நோட்டுகள் இருந்த அறைக்குள் யாரும் அத்துமீறி நுழைந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுடன் தொடர்புடைய நபர்கள் மட்டுமே அங்கே சென்றிருக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்று நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழு:

இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு பணம் எங்கிருந்து வந்தது என்று ஆராய உள்ளது. நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் ஊழியர்கள் அல்லது வேறு எவருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த விசாரணை முடிந்து, மறு அறிவிப்பு வரும் வரை நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதித்துறைப் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் டாப் 10 தூய்மையான நகரங்கள்! சென்னைக்கு எந்த இடம்?

vuukle one pixel image
click me!