
அனைவரும் எதிர்பார்த்தபடியே குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுகவின் இரு அணிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரதமர் விடுத்த கோரிக்கையை ஏற்று ராம்நாத்துக்கு தேர்தலில் ஆதரவாக வாக்களிப்பது என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்திருந்தார். சசிகலா டீம் இதுவரை இவ்விவகாரத்தில் வாய் திறக்கவில்லை.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவை பிரதமரிடம் நேரில் சென்று தெரிவிப்பதற்காக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்றிருந்தார்.இரவானதால் அவர் தமிழ்நாடு புதிய இல்லத்தில் தங்கினார்.
எடப்பாடியின் டெல்லி பயணம் குறித்து தகவல் பரவியதும், தமிழக செய்தியாளர்கள் தமிழ்நாடு இல்லத்தின் முன்பு குவியத் தொடங்கினர். முன்பு எளிதாக தமிழ்நாடு இல்லத்திற்குள் சென்று வந்த செய்தியாளர்களுக்கு நேற்று மட்டும் திடீரென அனுமதி மறுக்கப்பட்டது.
இந்தமுறை செய்தியாளர்களை இல்லத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததை அடுத்து காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அதிர்ச்சியடைந்த செய்தியாளர்கள் தமிழ்நாடு புதிய இல்லத்தின் வாயில் முன்பு அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். நள்ளிரவு தாண்டியும் நீடித்த இப்போராட்டத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.