
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக மீண்டும், மீண்டும் போராட்டம் நடத்தும் இளைஞர்களை பொறுக்கிகள் என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி. சுப்பிரமணியசாமி மீண்டும் வசைபாடியுள்ளார்.
ஏற்கனவே, இதேபோல், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடத் தொடங்கிய தமிழ் இளைஞர்களை பொறுக்கிகள் என்று கூறியதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர் மத்தியிலும் கடும் கண்டனத்தை சுப்பிரமணிய சாமி வாங்கிக்கட்டிக்கொண்டார். இப்போது மீண்டும் பேசியுள்ளது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதாக அமைந்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், தொடர்ந்து 3-வது ஆண்டாக போட்டி நடத்தமுடியாமல் தடைபட்டுள்ளது. இந்த முறை போட்டியை நடத்தியே தீர வேண்டும் என இளைஞர்கள் கடந்த 3 நாட்களாக தமிழகம் எங்கும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தினால் தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சுப்பிரமணிய சாமி கூறி சர்ச்சையை தொடங்கி வைத்தார். அதன்பின், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் இளைஞர்களை பொறுக்கிகள் என்று அவதூறாக டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழக மக்கள், அரசியல் கட்சிகள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் போராட்டம் வலுத்து, கடந்த 2 நாட்களாக இளைஞர்கள் இரவு, பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், ஆத்திரமடைந்த பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணியசாமி டுவிட்டரில் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணி சாமி வெளியிட்ட கருத்தில் “ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறுக்கிகளும் டுவிட்டரில் பீட்டா அமைப்பை அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த தமிழ் பொறுக்கிகள், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்காக தங்கள் முகவரியையும் எழுத வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் மற்றொரு பதிவில், சுப்பிரமணிய சாமி கூறுகையில், “ டுவிட்டரில் பதிவிடும் ஒவ்வொருவரின் முகவரியைக் கேட்டதும் தமிழ் பொறுக்கிகள் ஏன் நடுங்குகிறார்கள்?. முகவரியை தர அஞ்சுகிறார்கள். பயமா?. தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினுக்கு சி.ஆர்.பி. எப். போலீஸ் பாதுகாப்பு, தலைவர் கலைஞருக்கு கருப்பு பூனை படைபாதுகாப்பு? ஏன தமிழக போலீஸ் வேண்டாமா?'' எனத் தெரிவித்துள்ளார்.