
தமிழர்களின் கலாச்சார உணர்வுகளை மதித்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், மத்திய அரசு துணையாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கை காரணமாக ஜல்லிகட்டு விரைவில் நடைபெற உள்ளது. இதனிடையே, நேற்று முன்தினம் தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வலியுறுத்தினார். அப்பொழுது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு துணையாக இருக்கும் என பிரதமர் உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், தமிழர்களின் உயரிய கலாச்சாரத்தை நினைத்து பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திரமோடி தனது, டுவிட்டர் பக்கத்தில் இன்று மீண்டும் பதிவு செய்துள்ளார். தமிழர்களின் கலாச்சார உணர்வுகளை மதித்து, தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு துணை நிற்கும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.