
ஏமாற்றும் விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ஆயுட்காலத் தடை விதிப்பது பற்றி நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆராய்ந்து வருவதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அசோசேம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மக்களுக்குத் தவறாக வழிகாட்டும் வகையில் உள்ள விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு, விளம்பரங்களில் நடிக்க ஆயுட்காலத் தடை விதிப்பது பற்றித் தமது அமைச்சகம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
கலப்படம் செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் மசோதா கொண்டுவர உள்ளதாகவும் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார். மக்களை ஏமாற்றும் வகையில் உள்ள, விளம்பரங்களில் நடிப்பவர்களுக்கு, ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்திருப்பது குறிப்பிடத் தக்கது.