
காஷ்மீரில் இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் சந்தன்வாரியிலிருந்து பஹல்காம் நோக்கி 39 பேருடன் இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பேருந்து சென்று கொண்டிருந்தது. இதில், 2 காஷ்மீர் காவலர்கள் மற்றும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் 37 பயணம் மேற்கொண்டனர். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது. இதில், பயணம் செய்த 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து, காயமடைந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படுகாயமடைந்தவர்களை ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு வருகின்றனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.