ஜி20 டெல்லி பிரகடனத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட 200 மணி நேர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தலைவர் அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார்
இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜி20 டெல்லி பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரகடனத்தில் தெற்குலக நாடுகளின் வளர்ச்சிக்கான இந்தியாவின் முன்னுரிமைகள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளது. மேலும், உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைத்து அங்கு நிரந்தர அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், உச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜி20 பிரகடனத்தின் மீது ஒருமித்த கருத்தை வெளியிட இந்திய தூதர்கள் குழு 200 மணிநேர இடைவிடாத பேச்சுவார்த்தைகளை நடத்தியது என்று ஜி20 இந்திய தலைமைக்கான ஷெர்பா (ஜி20 தலைவர்) அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார்.
இணைச் செயலாளர்கள் ஈனம் கம்பீர் மற்றும் கே நாகராஜ் நாயுடு உட்பட இந்திய தூதர்கள் குழு, 300 இருதரப்பு சந்திப்புகளை நடத்தியதுடன், சர்ச்சைக்குரிய உக்ரைன் போர் உள்பட 15 வரைவுகளையும் விநியோகித்தது. இதன் விளைவாக, ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் முதல் நாளிலேயே ஒருமித்த கருத்துக்கு வழி வகுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஜி20 மாநாட்டில் மிகவும் சிக்கலான பகுதி என்பது ரஷ்யா-உக்ரைன் விவகாரம். இத்தகைய புவிசார் அரசியல் ஒருமித்த கருத்தைக் கொண்டுவருவது மிகவும் சிக்கலானது. இதனை சாத்தியப்படுத்த 200 மணிநேர இடைவிடாத பேச்சுவார்த்தைகள், 300 இருதரப்பு சந்திப்புகள் நடத்தப்பட்டு, 15 வரைவுகள் வெளியிடப்பட்டன.” என அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார்.
ஈனம் கம்பீர் மற்றும் கே நாகராஜ் நாயுடு ஆகியோரின் முயற்சிகளில் தனக்கு பெரிதும் உதவியதாக அமிதாப் கண்ட் கூறினார்.
பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தோனேஷியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் முன்னேற்றத்தை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கும் சர்ச்சைக்குரிய பிரச்சினையில், ஜி20 நாடுகளுக்கு இடையே எதிர்பாராத ஒருமித்த கருத்தை இந்தியா ஏற்படுத்தியது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை!
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் குறிப்பிடுவதை டெல்லி ஜி20 பிரகடனம் தவிர்த்தது. ஆனாலும், ஒருவரையொருவர் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிக்கும் கொள்கையைப் பின்பற்றுமாறு அனைத்து நாடுகளுக்கும் பொதுவான அழைப்பு விடுத்துள்ளது.
“பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் பலதரப்பு அமைப்பு உட்பட சர்வதேச சட்டத்தின் கொள்கைகளை நிலைநிறுத்த அனைத்து நாடுகளையும் நாங்கள் அழைக்கிறோம்.” என டெல்லி ஜி20 பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.