
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) இன்று மேலும் ஒரு பெரும் சாதனையை நோக்கி புறப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான (நவம்பர் 2) இன்று மாலை 5.26 மணிக்கு, ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து CMS-03 எனும் புதிய தொடர்பு செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. இதன் எடை சுமார் 4,410 கிலோ. இது இதுவரை இந்தியா ஏவக்கூடிய மிகப்பெரிய தொடர்பு செயற்கைக்கோளாகும்.
CMS-03: இந்தியாவின் மிகப்பெரிய தொடர்பு செயற்கைக்கோள்
இஸ்ரோவின் CMS-03 செயற்கைக்கோள், பல்துறை தகவல் தொடர்பு சேவைகளை வழங்குதல் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்திய நிலப்பரப்பும், கடல் பகுதியும் உட்பட விரிந்த பரப்பில் சேவையை வழங்கும் திறன் கொண்டது. இதன் மூலம் தொலைத்தொடர்பு, டிஜிட்டல் பரிமாற்றம், மற்றும் இணைய சேவைகள் மேம்படும் என நம்பப்படுகிறது.
‘பாகுபலி’ என அழைக்கப்படும் LVM3-M5
இந்த செயற்கைக்கோளை ஏவுவதற்காக இஸ்ரோ தனது சக்திவாய்ந்த LVM3-M5 (Launch Vehicle Mark-3) ராக்கெட்டை பயன்படுத்துகிறது. இதன் உயரம் 43.5 மீட்டர், மேலும் இது 4,000 கிலோ வரை எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் ஏற்றும் திறன் கொண்டது. இதன் வலிமையால் இது “பாகுபலி ராக்கெட்” என அறியப்படுகிறது.
புதிய தலைமுறை ‘ஹெவி-லிப்ட்’ ஏவுநிலை
LVM3 ராக்கெட் மூன்று நிலைகள் கொண்டது. இரண்டு திட எரிபொருள் பூஸ்டர்கள் (S200), ஒரு திரவ எரிபொருள் மையம் (L110), மற்றும் ஒரு கிரையோஜெனிக் நிலை (C25). இதன் மூலம் இஸ்ரோ 4,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை Geosynchronous Transfer Orbit (GTO)-வில் செலுத்துவதற்கான முழுமையான தன்னிறைவு பெற்றுள்ளது.
முந்தைய சாதனைகள்
இஸ்ரோ இதற்கு முன் தனது மிகப்பெரிய GSAT-11 செயற்கைக்கோளை 2018 டிசம்பர் 5 அன்று பிரான்ஸ் நாட்டிலுள்ள குரூ (Kourou) மையத்தில் இருந்து Ariane-5 VA-246 ராக்கெட்டின் மூலம் ஏவியது. அது 5,854 கிலோ எடையுடையதாக இருந்தது. இன்று ஏவப்படவுள்ள CMS-03, அதே அளவுக்கு மிகுந்த தொழில்நுட்ப மேம்பாட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-3க்கு பின் புதிய பயணம்
LVM3 ராக்கெட் கடந்த ஆண்டு சந்திரயான்-3 திட்டத்தையும் வெற்றிகரமாக ஏவியது. அதன் மூலம் இந்தியா சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடக வரலாறு படைத்தது. அதே ராக்கெட் இன்று CMS-03 செயற்கைக்கோளையும் விண்ணில் ஏற்றப்போகிறது.
பயணத்தின் நோக்கம்
இதுகுறித்து இஸ்ரோ தெரிவித்ததாவது, CMS-03 செயற்கைக்கோளின் முக்கிய நோக்கம் பன்முகத் தகவல் தொடர்பு சேவைகள் வழங்குவதாகவும். இதன் மூலம் கடல்சார் பகுதிகளிலும், தொலைவான இந்திய தீவுகளிலும் கூட உயர்தர இணையம் மற்றும் தொடர்பு சேவைகள் கிடைக்கும். இஸ்ரோவின் “பாகுபலி” ராக்கெட் இன்று மீண்டும் ஒரு மைல்கல்லாக இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் பதியவுள்ளது.