SSLV Rocket : எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் இஒஎஸ்-02 செயற்கைக்கோளுடன் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை சரியாக 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ எஸ்.எஸ்.எல்.வி (SSLV) எனும் சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்டை இன்று விண்ணில் ஏவி உள்ளது. அந்த ராக்கெட் இஒஎஸ்-02 செயற்கைக்கோளுடன் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை சரியாக 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இதற்கான 5 மணிநேர கவுண்ட்டவுன் இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கப்பட்டது. இது கடலோர நிலப் பயன்பாடு, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயரிப்பு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேலாண்மை உள்ளிட்டவற்றிற்கு பயனுள்ள வகையில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டு உள்ளது.
இந்த செயற்கைக்கோளில் உள்ள 2 நவீன் கேமராக்கள் 6 மீட்டர் அளவுக்கு துல்லியமாக படம் பிடிக்கக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதனுடன் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் மூலம் 8 கிலோ எடைகொண்ட ஆசாதிசாட் எனும் கல்விசார் செயற்கைக்கோளும் இன்று விண்ணில் ஏவப்பட்டு உள்ளது.
இந்த செயற்கைக்கோள் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள 75 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் உருவாக்கி உள்ளனர். தமிழகத்தில் மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் 10பேரும் இந்த செயற்கைக்கோளை செய்ய உதவி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.