ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!

Published : Dec 07, 2025, 09:59 PM IST
Israel Hamas India

சுருக்கம்

ஹமாஸை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஈரான் ஆதரவுப் படைகளுடன் ஹமாஸ் கொண்டுள்ள தொடர்பையும் இஸ்ரேல் சுட்டிக்காட்டியுள்ளது.

ஹமாஸை ஒரு பயங்கரவாத அமைப்பாக முறையாக அறிவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஈரானின் ஆதரவுப் படைகளுடன் ஹமாஸ் தொடர்பு கொண்டிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. ஹமாஸின் இந்தக் கூட்டணி இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு தனது நடவடிக்கைகளை மீண்டும் கட்டமைக்க முயன்றுவருகிறது. உலகெங்கிலும் தாக்குதல்களை நடத்த சர்வதேச கூலிப்படையைப் பயன்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவிடம் இஸ்ரேல் கோரிக்கை

இந்நிலையில், ஜெருசலேமில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், "ஹமாஸ் போன்ற அமைப்புகளைத் பயங்கரவாதக் குழுக்களாக அறிவித்து, அவற்றின் மீது தடை விதிக்க இந்தியா கடுமையாக உழைக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. இஸ்ரேல் சில ஆண்டுகளுக்கு முன்பு லஷ்கர்-இ-தொய்பாவைத் பயங்கரவாதக் குழுவாக அறிவித்தது. இதையே இந்தியாவும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்," என்று கூறினார்.

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாக இருந்துள்ள லஷ்கர்-இ-தொய்பாவை கடந்த 2023ஆம் ஆண்டில் இஸ்ரேல் பயங்கரவாதக் குழுவாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் பொது எதிரி

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) சர்வதேச செய்தித் தொடர்பாளர், லெப்டினன்ட் கர்னல் நாடவ் ஷோஷானி இதற்கு முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா ஹமாஸைத் பயங்கரவாதக் குழுவாக அறிவிப்பது நல்லது. இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் ஒரு பொதுவான எதிரி உள்ளார். நாம் யாரை எதிர்கொள்கிறோம் என்று தெளிவாகத் தெரிவிப்பது சிறப்பாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

மேலும், எந்த ஒரு ஹமாஸ் ஊழியரும் இந்திய மண்ணில் கால் வைக்கக் கூடாது என்பதை வெளிப்படையாக உணர்த்தும் வகையில் இந்தியா இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஹமாஸ் - லஷ்கர்-இ-தொய்பா தொடர்பு

ஈரான் மற்றும் சர்வதேச பயங்கரவாதக் குழுக்களுக்கு இடையேயான தொடர்பு வளர்ந்து வருவது பற்றி இந்தியாவுக்குத் தெரியும் என்று கூறிய அந்த மூத்த அதிகாரி, ஹமாஸை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பது வங்காளதேசம், மாலத்தீவுகள், நேபாளம் போன்ற இந்தியாவின் அண்டை நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் வலியுறுத்தினார்.

ஹமாஸ் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா இடையேயான கூட்டுச் செயல்பாடு அதிகரித்து வருவதாகவும், அத்துடன் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த ஈரான் உலகளாவிய நெட்வொர்க்கை பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா. அமைப்புக்கு நிதி உதவியை நிறுத்தக் கோரிக்கை

காசாவில் செயல்படும் ஐ.நா.வின் நிவாரண அமைப்புக்கு (UNRWA) இந்தியா அளித்துவரும் ஆதரவையும், நிதியுதவியையும் நிறுத்த வேண்டும் என்றும் இஸ்ரேல் இந்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இந்த ஐ.நா. அமைப்புக்குள் ஹமாஸ் ஊடுருவியுள்ளது என்றும் இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.

இந்த ஐ.நா. அமைப்புக்கு இந்தியா 2024-2025 நிதியாண்டில் 5 மில்லியன் டாலர் நிதியுதவி செய்துள்ளது. எனினும், மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா கடைப்பிடிக்கும் இருதரப்பு சமநிலைக் கொள்கையை இஸ்ரேல் புரிந்துகொள்கிறது என மற்றொரு மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ பயணிகளுக்கு ரூ.610 கோடி ரீஃபண்ட்! உன்னிப்பாக கண்காணிக்கும் மத்திய அரசு!
செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம்.. திருப்பதி திருட்டு வழக்கில் ரவிக்குமார் வாக்குமூலம்!