
சர்ச்சைக்குரிய சாமியாரும், முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு நெருங்கிய நண்பரும், ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடையவராக கருதப்பட்டசந்திராசாமி நேற்று காலமானார். அவருக்கு வயது 66.
நேமிசந்த் என்ற இயற்பெயர் கொண்ட சந்திராசாமி கடந்த 1948-ல் ராஜஸ்தானில்உள்ள பேஹாரில் பிறந்தவர். சிறு, சிறு மந்திர, தந்திர வேலைகளைச் செய்து, காளியின் தீவிரமாக பக்தராக சந்திராசாமி தன்னைக் காட்டிக்கொண்டார்.
காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த நரசிம்மராவுக்கு ஆன்மீக ஆலோசகராகவும் அவருக்கு நம்பிக்கைக்கு உரியவராகவும் சந்திராசாமிஇருந்தார். அதுமட்டுல்லாமல் புருனே சுல்தான், பஹ்ரைன் இளவரசர், நடிகைஎலிசபெத் டெய்லர், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்க்கிரெட் தட்சர், ஆயுத விற்பனையாளர் அதன் கஷோகி, மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவுத்இப்ராஹிம் உள்ளிட்டவர்களுக்கு ஆலோசகராக சந்திராசாமி இருந்து வந்தார்.
அதிகார மையமாக, சர்வதேச அளவில் முக்கிய வி.வி.ஐ.பி.க்களுக்குஇடைத்தரகாரக சந்திராசாமி இருந்து வந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடையவராக கூறப்பட்டபோதிலும், அந்த அறிக்கையில் இருந்து சந்திராசாமி பெயர் நீக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.
ஆனால், ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்த ஜெயின் கமிஷன்சந்திராசாமியிடம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது. ஆனால், கடைசி வரி அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தவில்லை.
இந்நிலையில், 1996ம் ஆண்டு லண்டன் தொழிலதிபர் ஒருவரிடம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் சந்திராசாமி கைது செய்யப்பட்டார். மேலும், அன்னிய செலாவணி ஒழுங்குமுறைச்சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். அன்னிய செலாவணி மோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் சந்திராசாமிக்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து, உடல்நலக் குறைவாலும், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் செயல்பாட்டு குறைவாலும், பக்கவாதத்தாலும் சந்திராசாமி அவதிப்பட்டு வந்தார்.இந்நிலையில் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சந்திராசாமி நேற்று நண்பகல் 2.56 மணிக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.