ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பயணச்சீட்டு சலுகை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீண்டும் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ரயில்களில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா காலத்தில் இந்த பயணச் சலுகையானது நிறுத்தப்பட்டது. கொரோனாவை காரணம் காட்டி இந்திய ரயில்வேயில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. நடைமேடை டிக்கெட் விலை மாற்றம், பயணிகள் ரயிலுக்கான டிக்கெட் விலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் முறைபடுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர் பயண டிக்கெட் சேவை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று பயணிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
மனைவியின் கண் முன்னே கணவனை கத்தியால் கூறு போட்ட கள்ளக்காதலன் கைது
இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், மூத்த குடிமக்களுக்கான பயண சலுகை சீட்டு முறை மீண்டும் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது. அப்படி வரும் பட்சத்தில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை பயணச்சீட்டில் சலுகை வழங்க வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் மூத்த குடிமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.