
தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றுகிறேன் எனக் கூறி, விமானப்படை வீரரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 40 நாட்களில் சிக்கினார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகரைச் சேர்ந்தவர் அகில் மனோகர். விமானப்படையில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் குமரநல்லூரைச் சேர்ந்த அஷிதா(வயது24) என்ற பெண்ணை, அகில் திருமணம் செய்தார்.
அஷிதா தான் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி என்றும், தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர் என்பதால், அங்கு லஞ்சஒழிப்பு துறையில் பணியாற்றுவதாகக்கூறி அகிலை திருமணம் செய்தார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை வைக்கத்தில் அஷிதா தனது மாமனார் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது, பாலக்காடு நகரைச் சேர்ந்த சந்தி என்பவர் , அஷிதாவைத் தேடி வந்தார். தனக்கு வேலை வாங்கித் தருவதாக அஷிதா ரூ.3 லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டார் அதை திரும்ப தரக்கூறி பிரச்சினை செய்தார்.
இதையடுத்து, அஷிதாவை அழைத்துக்கொண்டு, அகில் மனோகர் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அஷிதா போலி ஐ.பி.எஸ். அதிகாரி என்பது தெரியவந்தது. மேலும், ஏமாந்த சந்திக்கு ரூ.3 லட்சம் பணமும் திருப்பி அளிக்கப்பட்டது.
ஆனால், தன்னை ஐ.பி.எஸ். அதிகாரி எனக்கூறி திருமணம் செய்த அஷிதா மீது மாப்பிள்ளை வீட்டார் போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து, அஷிதா மீது மோசடி வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து வைக்கம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சாஹில் கூறுகையில், “ கடந்த சில ஆண்டுகளாக அஷிதா குமரநல்லூரில் வசித்து வந்துள்ளார். அனைவரையும் தான் தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருவதாகக் கூறி நம்பவைத்துள்ளார். தனக்கு தெரிந்தவர்கள் முன், ஐ.பி.எஸ். சீருடை அணிந்து வந்து ஏமாற்றியுள்ளார்.
மேலும், சிலருக்கு வேலைவாங்கித் தருவதாகக்கூறியும் , தன் கார் டிரைவராக பணியமர்த்திக்கொள்வதாகக் கூறி சிலரிடம் அஷிதா பணம் பெற்றுள்ளார். ஆனால், உண்மையில் அஷிதா பள்ளிக்கல்வியைக்கூட முடிக்கவில்லை. இந்த மோசடியில் அஷிதாவின் பெற்றோர்களுக்கும் தொடர்பு இருக்கிறது” என்றார்.