
சீனா அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களுக்கு சீன, திபெத்திய மற்றும் பின்யின் எழுத்துக்களில் பெயர் சூட்டியுள்ளது. மூன்றாவது முறையாக அரங்கேறியுள்ள சீனாவின் இந்த முயற்சி பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு முன் இந்தியாவைச் சீண்டும் வகையில் அமைந்துள்ளது.
இதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "இதுபோன்ற செய்திகளை நாங்கள் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். சீனா இதுபோன்ற முயற்சியை மேற்கொள்வது இது முதல் முறை அல்ல. இதை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம்.." என்று கூறியுள்ளார்.
மேலும், "அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக உள்ளது, இருந்து வருகிறது, இனியும் இருக்கும். கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களைச் சூட்டுவதன் முயற்சிப்பது இந்த யதார்த்தத்தை மாற்றாது" என்றும் பாக்சி தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
சீனா உரிமை கொண்டாடும் அருணாச்சலப் பிரதேசத்தின் 11 இடங்கள் தெற்கு திபெத்தில் இருப்பதாகக் காட்டும் வரைபடத்தையும் சீனா வெளியிட்டுள்ளது. இந்தப் பகுதிகள் சீனாவின் ஜாங்னான் என்ற பகுதிக்குள் வருவதாக குறிப்பிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் அருணாச்சல பிரதேசத்தின் தலைநகர் இட்டாநகருக்கு அருகில் உள்ள நகரமும் இடம் பெற்றுள்ளது.
பெயரிடப்பட்ட 11 இடங்களில் ஐந்து மலைச் சிகரங்கள், இரண்டு குடியிருப்புப் பகுதிகள், இரண்டு நிலப் பகுதிகள் மற்றும் இரண்டு ஆறுகள் ஆகியவை அடங்கும். சீனாவில் உரிமைகோரப்படும் பகுதி எப்போதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால், சீனா இந்த இடங்களுக்கு சீனப் பெயர்களைச் சூட்டுவதன் மூலம் அவற்றைத் தங்களுடையதாக உரிமை கொண்டாடுகிறது.
சீனா இவ்வாறு இந்தியப் பகுதிகளுக்கு மறுபெயரிட்டுவது மூன்றாவது முறை ஆகும். இதற்கு முன் 2017ஆம் ஆண்டில், சீன சிவில் விவகார அமைச்சகம் இதேபோன்ற ஆறு இடங்களின் பட்டியலை வெளியிட்டது. பின்னர் 2021ஆம் ஆண்டிலும் 15 இடங்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டது.