இண்டிகோ விமானம் ரத்து.. திருமண வரவேற்பில் வீடியோ மூலம் கலந்துகொண்ட புதுமணத் தம்பதி!

Published : Dec 05, 2025, 06:19 PM IST
Indigo crisis Reception couple online

சுருக்கம்

இண்டிகோ விமானச் சேவை ரத்து செய்யப்பட்டதால், ஹூப்ளியைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர் தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் செல்ல முடியவில்லை. இதனால், அவர்கள், ஹூப்ளியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.

இண்டிகோ நிறுவனத்தின் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், கர்நாடக மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர், தங்கள் சொந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் காணொலி வாயிலாக மட்டும் ரிசெப்ஷனில் கலந்துகொண்டனர்.

நாட்டின் பெரிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவிப்பதைப் போலவே, இந்தத் தம்பதியினரும் சரியான நேரத்தில் தங்கள் இலக்கை அடைய முடியாமல் தவித்தனர்.

ஒடிசாவில் சிக்கிய புதுமணத் தம்பதி

ஹூப்ளியைச் சேர்ந்த மேதா க்ஷீர்சாகர் மற்றும் ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்த சங்கமா தாஸ் ஆகிய இருவரும் பெங்களூரில் மென்பொருள் பொறியாளர்களாகப் பணிபுரிபவர்கள்.

கடந்த நவம்பர் 23 ஆம் தேதி புவனேஷ்வரில் திருமணம் செய்து கொண்ட இத்தம்பதியினர், டிசம்பர் 3 ஆம் தேதி ஹூப்ளியில் உள்ள குஜராத் பவனில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

டிசம்பர் 2 ஆம் தேதி புவனேஷ்வரில் இருந்து பெங்களூரு வழியாக ஹூப்ளி செல்ல இவர்கள் இண்டிகோ விமானத்தில் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், விமானிகள் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், இவர்களது விமானம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை வரை மீண்டும் மீண்டும் தாமதமாகி, இறுதியில் டிசம்பர் 3 ஆம் தேதி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.

ஆன்லைனில் பங்கேற்பு

திட்டமிட்டபடி டிசம்பர் 3 ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டிய நிலையில், மணமக்களால் ஹூப்ளிக்கு வர முடியவில்லை. இருப்பினும், விருந்தினர்கள் அனைவரும் கூடிவிட்டதாலும், திருமண மண்டபம் அலங்கரிக்கப்பட்டு விட்டதாலும், நிகழ்ச்சியை நிறுத்த விரும்பாத குடும்பத்தினர் ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தனர்.

மணமக்கள் புவனேஷ்வரில் தங்களது திருமண உடையில் இருந்தவாறே, திருமண வரவேற்பு நடைபெறும் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் வீடியோ மூலம் இணைந்தனர்.

விருந்தினர்கள் அனைவரும் நேரில் வந்திருந்தாலும், புதுமணத் தம்பதியினர் புவனேஷ்வரில் இருந்துகொண்டே வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மணமகளின் பெற்றோர்கள் வந்திருந்த உறவினர்களை வரவேற்றனர்.

இந்தச் சம்பவம், இண்டிகோ விமானச் சேவை முடக்கத்தால், ஆயிரக்கணக்கான பயணிகளின் பயணத் திட்டங்கள் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பீகார் SIR பணியில் தில்லுமுல்லு.. நீக்கப்படாத 5 லட்சம் போலி வாக்காளர்கள்!
இனி தேசிய நாணயங்களில் தான் வர்த்தகம்! டாலருக்கு சவால் விடும் புடின்!