
Indias First Woman Rafale Fighter Pilot Shivangi Singh Dream About Space : உலகில் சக்திவாய்ந்த போர் விமானங்களில் ஒன்றாக கருதப்படும் பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட ரஃபேல் ஜெட் விமானத்தை ஓட்டிய முதல் இந்தியப் பெண் ஷிவாங்கி சிங் தான். பெண்கள் இந்தியாவின் முப்படைகளில் பரவலாக பங்காற்றவில்லை என்றாலும், அதில் விதிவிலக்காக முன்னேறி சென்றவர் ஷிவாங்கி.
பிரெஞ்சு பயிற்றுவிப்பாளர்களுடன் தீவிர பயிற்சிக்குப் பின் கடந்த 2020ஆம் ஆண்டு ரஃபேல் படையில் சேர்ந்தார். தற்போது அம்பாலா விமானப்படையில் பணி அமர்த்தப்பட்டுள்ளார். அவருடைய 'போர் விமானி' பயணம் குறித்து இங்கு காண்போம்.
யார் இந்த ஷிவாங்கி சிங்?
உத்திரப்பிரதேச மாநிலம் வாராணசியைச் சேர்ந்த ஷிவாங்கி சிங் சிறுவயதிலேயே பல கனவுகளுடன் வளர்ந்தவர். பனாரஸ் இந்து பல்கலையில் படித்த இவர் அதன் தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் அமைந்துள்ள விமானப்படை அகாடமியில் சேர்ந்தார். இந்தியாவின் பழமையான போர் விமானங்களில் ஒன்றான மிக் -21 (MiG-21) இல் ஷிவாங்கி கடுமையாக பயிற்சி பெற்றார். 2015 ஆம் ஆண்டில் பெண்கள் போர் விமானிகளாக பணி செய்ய இந்திய விமானப்படையில் அனுமதிக்கப்பட்டது.
ஷிவாங்கி சந்தித்த சவால்கள்
லெஃப்டினண்ட் ஷிவாங்கி சிங் போர் விமானங்களை இயக்கும் பயிற்சிகளில் கற்று தேர்ந்தவர். அதிநவீன சூப்பர்சானிக் விமானங்களை இயக்கும் அளவுக்கு சவால் நிறைந்த பயிற்சிகளை எடுத்து கொண்டவர். உலகின் அதிவேகமாக இயங்கக் கூடிய மிக் - 21 ரக போர் விமானத்தை இயக்கும் அளவுக்கு 2020ஆம் ஆண்டில் அவர் பயிற்சி பெற்றிருந்தார். லெஃப்டினண்ட் ஷிவாங்கி சக்திவாய்ந்த ரஃபேல் போர் விமானத்தையும் இயக்கக் கூடியவர் என்பதும் உலகம் அறிந்த உண்மை.
ஷிவாங்கி வெறும் கல்வி கற்பதை மட்டும் விரும்பவில்லை; அதனுடன் சுதந்திரமாக இருக்கவும் நினைத்திருக்கிறார். தன் தாய் தனக்கு அனைத்து முயற்சிகளிலும் உறுதுணையாக இருக்க வேண்டும் நினைத்துள்ளார். அவரது தாயும் மகளின் கனவுகளை புரிந்துகொண்டு பக்கபலமாக இருந்துள்ளார்.
கனவுகள் விரிந்த பால்யம்!
ஷிவாங்கி சிங் தன்னுடைய சிறுவயதில் முதல் முறையாக விமானப்படை அருங்காட்சியகத்திற்குச் சென்றபோது தான் அவருடைய கனவுகள் விரியத் தொடங்கின. அந்த அருங்காட்சியகத்தில் உண்மையான போர் விமானங்களைக் கண்டதும் ஆச்சரியத்தில் உறைந்திருக்கிறார். கண்கள் பூரிப்பில் ஒளிர்ந்துள்ளன. தான் ஒரு விமானி ஆக வேண்டும் என்ற எண்ணம் அன்றுதான் அவருள் ஏற்பட்டிருக்கிறது. அவரது லட்சியப் பயணத்தில் அவரது தாய்க்கும் பெரும் பங்குண்டு.
பறவையாய் பறக்கலாம்!
தான் ஒரு விண்வெளி வீரராக வேண்டும் என்ற எண்ணமும் ஷிவாங்கிக்கு உள்ளது. தற்போது அவர் சோதனை பைலட் பயிற்சிக்கு விண்ணப்பித்திருக்கிறார். இந்தியாவில் செயல்படுத்தப்பட இருக்கும் 'மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில்' தானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார் ஷிவாங்கி. நெடுங்காலமாக ஆண்களுக்கென ஒதுக்கப்பட்ட துறையில் சாதித்த ஷிவாங்கி, பெண்கள் எத்துறையிலும் பணியாற்ற முடியும் என வார்த்தையில் மட்டுமல்ல வாழ்ந்தும் காட்டி நம்பிக்கையூட்டுகிறார்.