‘‘அம்மா உள்ளத்தின் வார்த்தை; ‘மம்மி’, உதட்டில் இருந்து வருவது’’ தாய் மொழிக்கு மகுடம் சூட்டிய வெங்கையா!

First Published Sep 20, 2017, 10:54 AM IST
Highlights
Indians should speak in their mother tongue more less in English Venkaiah Naidu


‘‘அம்மா என்பது இதயத்தில் இருந்து வருவது; ‘மம்மி’ என்பது உதட்டில் இருந்து வருவது’’ என்று கூறிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அனைவரும் தங்கள் தாய் மொழியில் பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

தமிழகத்தை சேர்ந்த பிரபல கர்நாடக இசைப்பாடகியான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழாவையொட்டி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது-

‘‘மக்கள், தங்கள் தாய்மொழியை மறந்துவிடக் கூடாது. அதே நேரத்தில், வெளிநாட்டுக்காரர் ஒருவருடன் பேசும்போது, ஆங்கிலத்தில் பேசுவதுதான் சிறப்பானதாக இருக்கும்.

தற்போது அம்மா, அப்பாவை குறிப்பிடுவதற்கு ஆங்கில மொழியில் ‘மம்மி, டாடி’ என்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். ஆனால், ‘அம்மா’ என்ற வார்த்தை ஒரு தாய்க்கு மிகவும் அழகான வார்த்தையாகும்.

அம்மா என்ற வார்த்தையோ, அல்லது உருதுவில் ‘அம்மி’ என்ற வார்த்தையோ அதை உச்சரிப்பவர்களின் இதயத்தில் இருந்து வரும் வார்த்தைகளாகும்.

அதே நேரத்தில், ‘மம்மி’ என்ற வார்த்தை உதட்டில் இருந்து வரும் வார்த்தையாகும். எனவே இந்தி, சமஸ்கிருதம், உருது, அல்லது தெலுங்கு உள்ளிட்ட எந்த மொழியாக இருந்தாலும் நாம் நமது தாய்மொழியில்தான் பேச வேண்டும்.

ஒருவர் தனது தாய்மொழியை அல்லது தாய், தாய்நாடு, பிறந்த ஊர் ஆகியவற்றை ஒருபோதும் மறக்கக்கூடாது என்று நான் எப்போதும் கூறி வந்திருக்கிறேன். இவைகளை மறந்தவர்கள், மனிதர்கள் என்று அழைக்க தகுதியற்றவர்கள்.

எனவே எப்போதும் நீங்கள் உங்கள் தாய் மொழியிலேயே பேசுங்கள். உங்கள் தாயின் கருவில் இருந்து வெளியாகும் மொழிக்கு மதிப்பு கொடுங்கள். அதே நேரத்தில் ஆங்கிலேயர்களிடம் ஆங்கிலத்தில் பேசுவது தவறு இல்லை’’.

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

வெங்கையா நாயுடு, குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்து எடுக்கப்படுவதற்கு முன்பாக மத்திய அமைச்சராக பதவி வகித்து வந்தார். ஆங்கிலத்தில் நல்ல புலமையுடன் உரையாற்றும் தகுதி பெற்று இருந்தபோதிலும், அவர் தாய் மொழியை ஒருவர் எப்போதும் மறக்கக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் ஆன பின்பும், தனது கருத்தில் அவர் உறுதியாக இருப்பது தெரிய வந்துள்ளது. விழாவில் தொடர்ந்து பேசிய அவர், தற்போது தான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல என்றும், இந்திய மக்கள் கட்சியை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற இந்த விழாவில் ‘குறையொன்றும் இல்லை’ என்ற தலைப்பில் கண்காட்சி இடம் பெற்றிருந்தது.

விழாவில் பேசிய வெங்கையா நாயுடு, சுப்புலட்சுமி நூற்றாண்டு விழாவின் நினைவு நாணயத்தையும் வெளியிட்டார்.

click me!