தேர்வின் போது தூக்கம் வராமல் இருக்க மாத்திரைகளை உட்கொண்ட மாணவிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், உயர்நிலைப் பள்ளி ஆண்டுத் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். தேர்வுக்கு படிக்கும் போது தூக்கம் வராமல் இருப்பதற்காக அந்த மாணவி தூக்க மாத்திரைகளை அதிகம் உட்கொண்டதாக தெரிகிறது. இதனால், இரவு முழுவதும் படித்த அந்த மாணவி தீடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்ததில், அந்த மாணவிக்கு நரம்பு வீக்கம் ஏற்பட்டு, இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, மருத்துவர்கள் பரிந்துரையின்படி, அந்த மாணவிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கும் சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகளின் போது, பல மாணவர்கள் தூங்காமல் விழித்து படிப்பதற்காக தூக்க எதிர்ப்பு மாத்திரைகளை உட்கொள்வதாக கூறப்படுகிறது. அதேபோல், தேநீர் அல்லது காபி மூலம் கஃபைன் உட்கொள்ளும் பழக்கமும் அதிகரித்துள்ளது. இந்த ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை அவர்களின் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் ஷரத் ஸ்ரீவஸ்தவா, தேர்வுகளின் போது விழித்திருக்க இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தும் மாணவர்களின் ஆபத்தான போக்கு குறித்து விளக்கியுள்ளார். 'சுனியா' மற்றும் 'மீத்தி' போன்ற பெயர்களில் கவுன்ட்டர்களில் விற்கப்படும் இந்த மருந்துகள், பாங்காக் போன்ற நாடுகளில் இருந்து கடத்தப்படுவதாக அவர் கூறினார்.
தென் மாவட்டங்கள் பயிர் சேதம்: விவசாயிகளுக்கு ரூ.208 நிவாரணத் தொகை - அமைச்சர் அறிவிப்பு!
“இது அதிர்ச்சியாக இருந்தாலும், தேர்வுகளின் போது விழித்திருக்க உதவும் இந்த தூக்க எதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.” என மருத்துவர் ஷரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். இந்த மருந்துகள் ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும், குறிப்பாக கஃபைனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டு இந்த மாத்திரைகளை சாப்பிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என அவர் கூறினார்.
நினைவாற்றல், மனநிலை, விழிப்புணர்வு மற்றும் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துவதற்காக பெரிதும் அறியப்படும், Provigil என விற்கப்படும் இந்த மாத்திரைகள் Modafinil வகைகளாகும். இந்த மருந்துகள் சுமார் 40 மணிநேரம் விழித்திருக்க உதவும் என மற்றொரு மருத்துவர் கூறுகிறார்.
தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுக்கும் பொருட்டு மாணவர்கள் மீது சுமத்தப்படும் அழுத்தம், இதுபோன்ற மாத்திரைகளை அவர்கள் உட்கொள்ள செய்கிறது என மனநல மருத்துவர், டாக்டர் ஆர்.கே.சக்சேனா தெரிவித்துள்ளார். “பொதுத் தேர்வில் 98, 99 சதவீதம் மதிப்பெண்கள் பெறுவதற்கான அழுத்தம் அவர்களை மெதுவாகக் கொன்று வருகிறது. குழந்தைகள் தங்கள் நண்பர்களை விட அரை சதவிகிதம் குறைவாகப் பெற்றால்கூட கசக்கப்படுகிறார்கள். இதுபோன்ற அதிக சதவீதம் யதார்த்தத்திற்கு மாறானது என்பதை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என அவர் கூறியுள்ளார்.