2023-24-ம் நிதியாண்டில் சரக்கு வர்த்தகம், மொத்த வருவாய், இருப்புப் பாதை அமைத்தல் ஆகியவற்றில் இதுவரை இல்லாத சாதனையை இந்திய ரயில்வே பதிவு செய்துள்ளது
ரயில் நிலையங்களில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இந்த முயற்சியின் முக்கிய நடவடிக்கையாக, அமிர்த பாரத ரயில் நிலையத் திட்டத்துக்கு அண்மையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களின் மறுவடிவமைக்கப்படவுள்ளன.
அதேபோல், பல்வேறு ரயில்வே கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிரத்யேக சரக்கு வழித்தடத்தின் இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தில் ரூ.1,06,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மேலும், பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடாக, மாறி வருவதில் ரயில்வேயின் முக்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டும் பிரதமர், “ரயில்வே துறையை மாற்றியமைப்பதே வளர்ச்சியடைந்த பாரதத் திட்டத்தின் உத்தரவாதம்.” என்கிறார்.
இந்த நிலையில், 2023-24-ம் நிதியாண்டில் சரக்கு வர்த்தகம், மொத்த வருவாய், இருப்புப் பாதை அமைத்தல் ஆகியவற்றில் இதுவரை இல்லாத சாதனையை இந்திய ரயில்வே பதிவு செய்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “023-24-ம் நிதியாண்டில் சரக்கு வணிகம், மொத்த வருவாய், இருப்புப் பாதை அமைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய ரயில்வே வரலாற்றில் மிகச் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்யும் பாதையில் உள்ளது.
மின்சார வாகன கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்!
முதற்கட்ட தரவுகளின்படி, 2024, மார்ச் 15 அன்று 1500 மெட்ரிக் டன் சரக்கு கையாளுதலை இந்திய ரயில்வே கடந்துள்ளது. இதற்கு முன், 2022-23-ம் நிதியாண்டில் 1512 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டதே சாதனையாக இருந்தது.
இந்த நிதியாண்டில், இந்திய ரயில்வேயின் மொத்த வருவாய் இன்றைய நிலவரப்படி ரூ.2.40 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி நிலவரப்படி, மொத்த வருவாய் ரூ.2.23 லட்சம் கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டில் இந்திய ரயில்வேயின் மொத்த செலவு ரூ.2.26 லட்சம் கோடியாக உள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் பயணித்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை 648 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது 52 கோடி அதிகமாகும். கடந்த ஆண்டு 596 கோடி பயணிகள் ரயில்களில் பயணம் செய்தனர்.
இந்த நிதியாண்டில் இன்றைய தேதியில் இந்திய ரயில்வே 5100 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய ரயில் தடங்களை அமைத்துள்ளது. இந்த நிதியாண்டில், சராசரியாக ஒரு நாளைக்கு 14 கி.மீ. தொலைவிற்கு பாதைகள் அமைக்கப்படுகின்றன.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.