பெரும் சோகம்: கொரோனா பரவல் வேகத்தில் உலகளவில் 4ம் இடத்தில் இந்தியா

By karthikeyan VFirst Published May 26, 2020, 9:24 PM IST
Highlights

உலகளவில் தினமும் அதிகமான கொரோனா பாதிப்பு உறுதியாவதில், இந்தியா நான்காமிடத்தில் இருக்கிறது.
 

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் 56 லட்சத்திற்கும் அதிகமானோரை தாக்கியுள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக 17 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புடன் தென் அமெரிக்க நாடான பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

ரஸ்யா, ஸ்பெய்ன், பிரிட்டன், இத்தாலி, ஃபிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ள நிலையில், துருக்கிக்கு அடுத்த 10வது இடத்தில் இந்தியா உள்ளது. மே 25ம் தேதி தான் இந்தியா டாப் 10க்குள் நுழைந்தது. இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த வியாழக்கிழமையிலிருந்து தொடர்ந்து 5 நாட்களாக தினமும் 6000க்கும் அதிகமான பாதிப்புகள் உறுதியாகி கொண்டிருக்கின்றன. 

மே 21 காலை 8 மணியிலிருந்து 22 காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 6088 பேருக்கும், மே 22-23க்கு இடையேயான 24 மணி நேரத்தில் 6654 பேருக்கும், மே 23-24 மணி நேரத்தில் 6767 பேருக்கும், மே 24ம் தேதி 6977 பேருக்கும் கொரோனா உறுதியான நிலையில், நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 வரையிலான 24 மணி நேரத்தில் 6535 பேருக்கு இந்தியாவில் தொற்று உறுதியாகியுள்ளது.

5 நாட்களாக தொடர்ச்சியாக தினமும் 6000க்கும் அதிகமான பாதிப்பு உறுதியாகிவரும் நிலையில், உலகளவில் தினமும் அதிகமான பாதிப்பு உறுதியாகும் நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காமிடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்கும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை நெருங்கிவிட்டது. இந்தியாவில் கொரோனா பரவல் தொடக்க கட்டத்தில் இருந்தபோது, அதிவேகமாக பரவி கடும் பாதிப்பை சந்தித்த இத்தாலி, ஸ்பெய்ன், ஃப்ரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா நான்காமிடத்தில் இருப்பது சோகமான விஷயம் தான்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 61 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய சூழலில் சுமார் 81 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
 

click me!