கடும் வெள்ளத்தில் சிக்கிய பெண்களை மீட்க தங்களை படிக்கட்டுகளாய் மாற்றிக் கொண்ட இளைஞர்கள் …. நெகிழ்ச்சி சம்பவம்...

By Selvanayagam PFirst Published Aug 20, 2018, 12:16 AM IST
Highlights

கேரள மாநிலம் பத்தனந்திட்டா பகுதியில் மழையில் மூழ்கியுள்ள வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட பெண்கள் படகில் ஏற முடியாமல் தவித்த போது இளைஞர்  ஒருவர் நீரில்  மூழ்கி மண்டியிட்டு அமர்ந்து அவரின் முதுகை படிக்கட்டு போல் வைத்துக் கொள்ள அங்கிருந்த அனைத்துப் பெண்களும், குழந்தைகளும் அதில் ஏறி படகிற்குள்  அமர்ந்தனர். தன்னார்வ இளைஞர்களின்  இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளத்தில்  மிதக்கிறது..

கேரள அணைகளில் இருந்து திறந்து விடப்படும் அதிகப்படியான உபரிநீர், தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. இதனால் மொத்த மாநிலமும் பெருங்கடலுக்குள் சிக்கியிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. இதைப்போல இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது. 

இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு, குழுவுக்கு தலா 65 ராணுவ வீரர்கள் தனித்தனியக பிரிந்து 10 மாவட்டங்களில் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக பொறியாளர் அதிரடிப்படையும் 10 குழுக்களாக சென்று மீட்பு பணிக்கு உதவியாக பணியாற்றி வருகின்றனர்.
 


வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள ஊரகப் பகுதிகளை இணைக்கும் வகையில் 13 தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டு அங்குள்ள மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை வெளிநாட்டவர்கள் உள்பட 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடும் வெள்ளத்தால் யாரும் செல்ல முடியாத இடங்களில் ராணுவ வீர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் சென்று நூற்றுக் கணக்கானோரை மீட்டனர். இதில் பனிக்குடம் உடைந்த நிலையில் இருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஹெலிக்காப்டர் மூலம் மீட்கப்பட்டு அவருக்கு அழகான குழந்தை பிறந்துள்ளது.

இதுதவிர  வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை படகு மூலமாகவும் ராணுவம்  மீட்டு வருகிறது. இதற்காக  நூற்றுக்கும் மேற்பட்ட   ராணுவ படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. கனமழையையும் பொருட்படுத்தாமல் ராணுவம் 24 மணி நேரமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. அவர்களுடன் தன்னார்வ இளைஞர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே பத்தனந்திட்டா பகுதியில் மழையில் மூழ்கியுள்ள வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட பெண்கள் படகில் ஏற முடியாமல் தவித்த போது இளைஞர் ஒருவர் நீரில்  மூழ்கி மண்டியிட்டு அமர்ந்து அவரின் முதுகை படிக்கட்டு போல் வைத்துக் கொள்ள அங்கிருந்த அனைத்துப் பெண்களும், குழந்தைகளும் முதுகின் மேல்  ஏறி படகிற்குள்  அமர்ந்தனர். இளைஞரின்  இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா முழுவதும் மழை, வெள்ளம், குளிர், நிலச்சரிவு என எதையும் பெருட்படுத்தாமல் ராணுவ வீரர்கள் பம்பரமாய்  சுற்றி சுற்றி பணியாற்றி வருகின்றனர். இந்த ராணுவ வீரர்கள் மட்டும் இல்லை என்றால் இந்நேரம் பல்லாயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்கள் என  பொது மக்கள் தெரிவித்தனர்.

பல இடங்களில் பொது மக்கள் வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் மரங்களை வெட்டி 1 மணி நேரத்தில் பாலங்களை அமைந்து அவர்களுக்கு உணவளித்து காப்பாற்றியுள்ளனர். தங்களது பசியைக் கூட பொருட்படுத்தாது மக்களுக்கு உணவளித்த ராணுவ வீரர்களை அவர்கள் பாராட்டியதோடு நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தனர்.

ராணுவ வீர்களைப்  பொறுத்தவரை தங்களது உயிரைப் பொருட்படுத்தாது நாட்டுககாக பணிபுரிபவர்கள். கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கைப் பேரிடர் இது வரை நாங்கள் பார்க்காதது என்றும், இது பெரும் சவாலானது என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக தன்னார்வ இளைஞர்களும் கை கோர்த்து செயல்பட்டு வருகின்றனர்.

மழை, வெயில், குளிர் என அனைத்தையும் தாங்கி சில சமயங்களில் தங்களது உயிரையை இழந்து இந்த நாட்டு மக்களின் நலனுக்காகசே வாழ்ந்து வரும் நமது ராணுவ வீரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் ! தீரமிகு தன்னாவ் இளைஞர்களையும் நாம் வணங்குவோம்.

 

click me!