
இறைவன் படைப்பில் அனைவரும் பிறக்கும் போது முழு உடல் திறனுடன் பிறப்பதில்லை. பலருக்கும் பிறக்கும் போதே சிறு குறைபாடுகள் ஏற்பட்டு விடுகின்றன. உடலில் குறைபாடுடன் பிறந்தாலும், அதனை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு மற்றவர்களுக்கு இணையான வெற்றியை பலர் தங்களின் வாழ்க்கையில் பெற்று வருகின்றனர். வாழ்க்கையில் சாதிக்க எதுவும் தடையில்லை என்பதற்கு பலரும் உதாரணங்களாகி இருக்கின்றனர்.
உலகளவில் சிறுவர்கள் அசாத்தியமாக செய்து வரும் பல்வேறு சாதனைகளை தினந்தோரும் பார்த்து வருவதால், திறமைக்கும் வயதுக்கும் சம்பந்தமே இல்லை என பல தருணங்களில் நாம் உணர்ந்து இருப்போம். இதே கூற்றை இந்திய சிறுவன் ஒருவன் தனது அசத்தலான கண்டுபிடிப்பின் மூலம் எடுத்துக் கூறி இருக்கிறான்.
பள்ளி மாணவர்:
அசாம் மாவட்டத்தை சேர்ந்த கரிம்கஞ்ச் மாவடத்தை சேர்ந்த மாணவர் அன்குரித் கர்மாகர், பார்வை குறைபாடு கொண்டவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி சாலைகளில் நடந்து செல்ல உதவும் ஸ்மார்ட் காலணிகளை உருவாக்கி அசத்தி இருக்கிறார். இந்த ஸ்மார்ட் காலணியில் உள்ள உயர் ரக தொழில்நுட்பம், பார்வையற்றவர்கள் சாலையில் நடந்து செல்லும் போது எதிரில் ஏதேனும் இடையூறு இருந்தால், எச்சரிக்கை செய்யும்.
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் வரும் தொழில்நுட்பங்களை போன்று தெரிந்தாலும், இவரின் கண்டுபிடிப்பு அளவில் மிகவும் சிறயதாகவே இருக்கிறது. வழக்கமான லெதர் காலணிகளில் அன்குரித் சில சென்சார்கள் மற்றும் பேட்டரிகள் அடங்கிய அசத்தலான தொழில்நுட்பத்தை பொருத்தி இருக்கிறார்.
சென்சார்:
தொழில்நுட்பத்தின் முன்புறத்தில் எதிரே வரும் தடைகளை கண்டறியும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது போன்ற தடைகளை கண்டறிந்தவுடன் காலணியில் இருந்து எச்சரிக்கை ஓசை கேட்கும். இதை வைத்து எதிரே தடை இருக்கிறது கவனமாக செல்ல வேண்டும் என்பதை பார்வையற்றவர்கள் புரிந்து கொள்ள முடியும். இந்த காலணியில் சிறிய பேட்டரி உள்ளது. இது சென்சாருக்கு தேவையான மின்சக்தியை வழங்குகிறது.
"வெளியில் செல்லும் போது வழியில் ஏதேனும் இடையூறு இருந்தால், காலணியில் உள்ள சென்சார் அதனை கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கும். காலணியில் இருந்து வரும் எச்சரிக்கை ஒலியை கேட்டதும் பார்வையற்றோர் கவனமாகி அதற்கு ஏற்ப அந்த இடையூறை கடந்து செல்ல முடியும்," என அன்குரித் தெரிவித்தார்.
ஆய்வாளர்:
வளர்ந்ததும் ஆய்வாளர் ஆகி இது போன்று மேலும் பல்வேறு பயனுள்ள சாதனங்களை கண்டறிந்து, மனித குலத்தின் வாழ்க்கையை எளிமையாக்க உதவ வேண்டும் என அவர் தெரிவித்தார். "பார்வையற்றவர்களுக்காக இந்த ஸ்மார்ட் ஷூவை உருவாக்கினேன். எனது லட்சியம் ஆய்வாளர் ஆக வேண்டும் என்பது தான். இது போன்று மேலும் பலவற்றை செய்து மக்களுக்கு உதவி, அவர்களின் வாழ்க்கையை எளிமையாக்க வேண்டும்," என அவர் மேலும் தெரிவித்தார்.