
Subhanshu Shukla's space mission postponed! நாசாவும், இஸ்ரோவும் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்பும் பயணத்திற்கு ஆக்சியம்-4 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆக்சிம் 4 மிஷனில் பைலட்டாக இந்திய விமானப்படையில் அனுபவம் வாய்ந்த விமானியாக பணியாற்றிய சுபான்ஷு சுக்லா பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் ஸ்பேஸ் எக்ஸ் பென்கான் ராக்கெட் மூலம் மே 29-ந் தேதி சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்ல இருந்தார்.
சுபான்ஷு சுக்லாவுடன் போலந்து, ஹங்கேரி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பேரும் ஆக்சியம்-4 பயணத்தில் விண்வெளிக்கு செல்ல இருந்தனர். பயணத்திற்கு முன்னதாக, இவர்களுக்கு எட்டு வாரங்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது திடீரென சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பயணிக்க இருந்த ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவரின் விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியா-அமெரிக்க விண்வெளி ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக ஆக்சியம்-4 இல் சுபாஷு சுக்லாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. 2025 இல் நடைபெறும் ககன்யான் திட்டத்திற்காகவும் சுபான்ஷு சுக்லா பயிற்சி பெற்று வருகிறார். இதுவரை ஒரே ஒரு இந்தியர் தான் விண்வெளிக்கு சென்றுள்ளார். 1984 இல் பயணித்த ராகேஷ் சர்மா இதுவரை விண்வெளிக்குச் சென்ற ஒரே இந்தியர். சோவியத் யூனியனின் சோயுஸ் டி-11 விண்கலத்தில் ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்றார்.
ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியராக சுபாஷு சுக்லா இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவரது விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. ஒத்திவைக்கப்பட்ட இந்த பணிகள் வரும் ஜூன் 8ம் தேதி மீண்டும் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.