
இந்தியாவின் (strategic deterrence capabilities) பாதுகாப்பு திறன்களுக்கு உந்துதல் அளிக்கும் வகையில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை (BrahMos supersonic cruise missile) சமீபத்தில் வங்காள விரிகுடாவில் நடத்தப்பட்ட வெற்றிகரமான சோதனையின்போது 800 கிமீ தூரம் வரை தாக்கும் திறனைக் காட்டியது. இந்த மேம்படுத்தப்பட்ட திறனுடன், பாகிஸ்தானுக்குள் உள்ள எந்தவொரு ராணுவ தளத்தையும் குறிவைக்கும் திறனை இந்தியா இப்போது பெற்றுள்ளது. இது இந்தியாவுக்கான பிராந்திய பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா நடத்தி இருக்கும் சோதனை வெற்றி பெற்றுள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணையின் தனித்துவமே நிலம், கடல் மற்றும் வான்படைகளிலிருந்தும் ஏவக்கூடியது. அதை சுகோய் ஸு-30 MKI போன்ற முன்னணி போர் விமானங்களுடன் ஒருங்கிணைக்க முடியும். இது இந்தியாவின் ராணுவ புதுமைகளை மேலும் விரிவுபடுத்துகிறது. 800 கிமீ வரம்பில், பாகிஸ்தானின் முக்கிய ராணுவ தளங்கள், விமான நிலையங்கள், கிடங்குகள், அணுசக்தி கிடங்குகள் என்று அனைத்தையும் இந்தியாவின் துல்லியமான தாக்குதல்களுக்கு உட்படுத்தலாம்.
MTCR நுழைவிற்குப் பிறகு வரம்பு அதிகரிப்பு
இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மாஸ்க்வா ஆறுகளின் பெயர்களைக் கொண்டது. முதலில் 290 கிமீ எல்லை வரம்புடன் செயல்பட்டது. இந்த ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தின் (MTCR) வழிகாட்டுதல்களைப் பின்பற்றியது. ஆனால், 2016-ஆம் ஆண்டு இந்தியா MTCR-இல் உறுப்பினராக சேர்ந்த பின்னர் இந்த வரம்பு நீக்கப்பட்டது. 2025 ஏப்ரல் 12 முதல் 15 வரை நடைபெற்ற அண்மை சோதனை இதன் புதிய செயல்பாட்டுத் திறனை உறுதிப்படுத்தியுள்ளது.
சப்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை விட மூன்று மடங்கு வேகம் அதிகம்:
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் ஏவுகணை, உலகின் வேகமான மற்றும் துல்லியமான ஏவுகணைகளில் ஒன்றாக பரவலாகக் கருதப்படுகிறது. மேக் 3 வேகம் எதிரிகளின் பாதுகாப்பு அமைப்புகளை விஞ்சுகிறது
மேக் 2.8 மற்றும் மேக் 3.0 க்கு இடையிலான வேகத்தில் பயணிப்பது பாரம்பரிய சப்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வேகமாக செயல்படுகிறது. எதிரிகளின் தளங்களை குறிவைத்து, குறிமாறாமல் இந்த ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்த முடியும்.
800 கிலோமீட்டர் தூர வரம்பு எட்டக் கூடியது:
ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு (MTCR) காரணமாக ஆரம்பத்தில் 290 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை, MTCR-ல் இந்தியா நுழைந்ததைத் தொடர்ந்து கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட 800 கிலோமீட்டர் தூர வரம்பு இப்போது இந்தியாவின் தொழில்நுட்ப முதிர்ச்சியை உறுதியாக்குகிறது. எதிரிகளுக்கு, குறிப்பாக பாகிஸ்தானுக்கு தெளிவான செய்தியை அனுப்புகிறது. பாகிஸ்தான் ராணுவ கட்டளை மையங்கள், விமான தளங்கள், ஏவுகணை தளங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளை துல்லியமாக குறிவைக்க உதவுகிறது.
பிரம்மோஸை இடைமறித்து தாக்கலாமா?
பிரமோஸின் சூப்பர்சோனிக் வேகம், துல்லியம், சூழ்ச்சித்திறன் ஆகியவை எதிரிகளின் துருப்புகள் இடைமறிப்பதை மட்டுப்படுத்துகிறது. இது இந்தியாவின் நம்பகமான பாதுகாப்பு தன்மையை மேலும் மேம்படுத்துகிறது என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.