
இந்தியா-ரஷ்யா உறவு எப்போதும் வலுவாக உள்ளது எனவும், பாகிஸ்தானுக்கு போர் விமானங்களையோ, ராணுவ தளவாடங்களையோ விற்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
பாகிஸ்தானும், ரஷ்யாவும் சமீபத்தில் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டன. இதற்கிடையில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புடின் கோவா வந்தார். இந்தியா-ரஷ்யா இடையே கோவாவில் நேற்று 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இது குறித்து ரஷ்யாவின் ரோஸ்டக் கார்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி செர்கே செமேசோவிடம், பேட்டி அளித்தபோது, பாகிஸ்தானுக்கு ரஷ்யா போர் விமானங்களை விற்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:
பாகிஸ்தானுடன், ரஷ்ய ராணுவம் மேற்கொண்டது, தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நவீன பயிற்சி. உலகை அச்சுறுத்தும் ஐஎஸ் தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள இந்த நவீன பயிற்சி முக்கியம்.
ஆனால், பாகிஸ்தானுக்கு போர் விமானங்களையோ, ராணுவ தளவாடங்களையே விற்பது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் ரஷ்யா செய்யவில்லை. அத்தகைய திட்டம் எதுவும் இல்லை. போக்குவரத்துக்கு பயன்படும் ஹெலிகாப்டர்கள் மட்டும் விற்கப்பட்டன. அதற்கான ஒப்பந்தமும் முடிந்து விட்டது. இந்தியா-ரஷ்யா உறவு எப்போதும் வலுவாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.