இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் பாதிப்பு 10,000 நெருங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணி நேரத்தில் 9,923 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 15-ம் தேதி பாதிப்பு 8,822 ஆக இருந்தது. அதன்பிறகு 5 நாட்கள் 12 ஆயிரம், 13 ஆயிரத்தை தாண்டி இருந்த நிலையில் இன்று 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 19 ஆயிரத்து 396 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 7,293 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 15 ஆயிரத்து 193 ஆக உயர்ந்தது. தற்போது 79,313 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தொற்று பாதிப்பால் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர கேரளாவில் 5, மகாராஷ்டிராவில் 2, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசத்தில் தலா ஒருவர் என மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,24,890 ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் நேற்று 13,00,024 டோஸ்களும், இதுவரை 196 கோடியே 32 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 686 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில முழுவதும் சிகிச்சை பெறுவோர்களின் 3953 அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 294, செங்கல்பட்டில் 129 பேருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.