
சாம்பியன் கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்ததையடுத்து ரசிகர்கள் வீட்டில் இருந்த டிவிக்களை சுக்கு நூறாக உடைத்தனர். மேலும் கிரிக்கெட் வீரர்களின் படங்களை தீயில் இட்டு கொளுத்தினர்.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டி இன்று மாலை இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
பாகிஸ்தானில் ஆரம்ப ஆட்டக்காரராக களமிறங்கிய ஃபக்கர் அபாரமாக விளையாடி சதத்தை நிறைவு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களை எடுத்தது பாகிஸ்தான் அணி. அதிகபட்சமாக ஃபக்கர் 114 ரன்களும், அசார் அலி 57 ரன்களும் எடுத்தனர்.
இந்திய பந்துவீச்சை பொரறுத்தவரை புவனேஸ்வர், ஜாதவ், பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையடுத்து இந்தியாவிற்கு 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பமே சொதப்பியது. இதனால் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி நிலவியது.
தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. தவான், ரோஹித், கோலி, யுவராஜ், தோனி என முன்னணி வீரர்கள் இந்திய அணி யின் 50 ரன்கள் குவிப்பதற்குள் ஆட்டமிழந்தனர்.
விக்கெட்டுகள் சிரிந்தாலும் பின்னர் இறங்கிய ஹார்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் இந்திய அணி 30.3 ஓவர்கள் முடிவில் 158 ரன்களுக்கு ஆட்டமிழந்து 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் முதல் முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையைக் கைப்பற்றியது பாகிஸ்தான்.
இதில் பெரும் அதிர்ச்சி அடைந்த கிரிக்கெட் ரசிகர்கள் வீடுகளில் இருந்த டிவிக்களை உடைத்து எறிந்தனர். மேலும், பலர் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களை தீயில் இட்டு கொளுத்தினர். இதனால் இந்தியாவே ரண களமாக காட்சி அளிக்கிறது.