Corona : இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இத்தன லட்சம் வரை அதிகரிக்கும்... எச்சரிக்கும் ஐஐடி பேராசிரியர்!!

By Narendran SFirst Published Jan 7, 2022, 7:27 PM IST
Highlights

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் 4 முதல் 8 லட்சம் வரை உச்சம் எட்டும் என்று ஐ.ஐ.டி. பேராசிரியர் மனீந்திர அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் 4 முதல் 8 லட்சம் வரை உச்சம் எட்டும் என்று ஐ.ஐ.டி. பேராசிரியர் மனீந்திர அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் முதன்முதலாக ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 58 ஆயிரத்து 97 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று அதிரடியாக கிட்டத்தட்ட 90 ஆயிரத்து 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இந்நிலையில் நாட்டில் இன்று புதிதாக 1,17,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 28 சதவீதம் அதிகமாகும்.

இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 36,265 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனிடையே, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் 4 முதல் 8 லட்சம் வரை உச்சம் அடையலாம் என்று ஐ.ஐ.டி. பேராசிரியர் மனீந்திர அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் சுமார் 10 நாட்களில், மும்பை மற்றும் டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்புகள் உச்சத்தை எட்டும். ஆனால் இந்த அலை மார்ச் மாதத்திற்கு பிறகு நீடிக்கும் என்று கூறமுடியாது. டெல்லி மற்றும் மும்பை ஆகிய இரு நகரங்களிலும், தினசரி பாதிப்பு 30,000 முதல் 50,000 வரை பதிவாகலாம். இதனால் இந்த மாதத்தின் இறுதியில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் உச்சத்தை எட்டும். நாடு முழுவதும் சுமார் 4 முதல் 8 லட்சம் தினசரி பாதிப்புகள் காணப்படலாம்.

கடுமையான ஊரடங்கு மூலம், 3-வது அலையை தாமதப்படுத்தலாம். எனினும், கொரோனா பரவும் வாய்ப்புகள் உள்ளன. கொரோனா பாதிப்புகள் அதிகரித்தாலும், சுகாதாரத்துறைக்கு அது சுமையாக இருக்காது. ஏனெனில், ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்த சதவீதத்திலேயே இருக்கும். ஒமைக்ரான் மாறுபாடு வேகமாக பரவுவதால், இந்தியாவில் ஜனவரி இறுதியில் கொரோனா உச்சம் அடைந்து, மார்ச் மாதத்தில் முழுவதும் குறைந்து காணப்படும் என்று தெரிவித்துள்ளார். இதேபோல் ஹெல்த் மெட்ரிக்ஸ் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் கிறிஸ்டோபர் முர்ரே, இந்தியாவில் ஒமைக்ரான் நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை, ஜனவரி பிற்பகுதியில் அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் உச்சத்தை எட்டக்கூடும். மார்ச் மாதத்தின் இறுதியில், தினசரி கொரோனா பாதிப்புகள் 10,000 முதல் 20,000 என்றே அளவிலேயே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

click me!