இந்த நாடுகளில் இருந்து வந்தால் சோதனை கட்டாயம்... புதிய கட்டுபாடுகளை விதித்தது இந்தியா!!

Published : Jan 07, 2022, 07:07 PM IST
இந்த நாடுகளில் இருந்து வந்தால் சோதனை கட்டாயம்... புதிய கட்டுபாடுகளை விதித்தது இந்தியா!!

சுருக்கம்

கொரோனா அதிகம் பரவி வரும் தென் ஆப்பிரிக்கா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா அதிகம் பரவி வரும் தென் ஆப்பிரிக்கா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இருக்கும் கொரோனா தாக்கமும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மத்திய மாநில அரசுகள் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மத்திய அரசு மீண்டும் பழையபடி வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்லும் அனைவரும் கட்டாயமாக ஏழு நாள் இல்லத் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உருமாறிய ஒமைக்ரான் கிருமிப் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகளில் இந்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி, தொற்று அபாயமிக்க நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இருந்து இந்தியா செல்வோர், தரையிறங்கும் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

தொற்று இல்லை என முடிவு வந்தால் மட்டுமே அவர்கள் விமான நிலைய வளாகத்தைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர். தொற்று இல்லை என முடிவு கிடைத்தவர்கள் தங்களது இல்லங்களில் ஏழு நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், எட்டாம் நாளில் அவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். விமான நிலையப் பரிசோதனையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது உறுதிப்படுத்தப்படுவோரின் மாதிரிகள் மரபணு வரிசைச் சோதனைக்கு அனுப்பப்படும். அவர்கள் பிரத்தியேக இடங்களில் தனிமைப்படுத்தப்படுவர். அப்பயணிகளின் நெருங்கிய தொடர்பில் இருந்தோரை அடையாளம் காணும் பணியைச் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மேற்கொள்ளும். அவ்வாறு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்தால், அவர்கள் அடுத்த ஏழு நாள்களுக்குத் தங்களது உடல்நிலையைத் தாமாகவே கண்காணிக்க வேண்டும்.

தொற்று அபாயமில்லா நாடுகளில் இருந்து வருவோரில் அங்கொருவர் இங்கொருவராக இரண்டு விழுக்காட்டுப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவர்கள் யார் யார் எனச் சம்பந்தப்பட்ட விமானப் போக்குவரத்து நிறுவனங்களே அடையாளம் காணும். பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்தாலும் அவர்களும் ஏழு நாள்கள் இல்லத் தனிமையில் இருக்க வேண்டும். எட்டாம் நாளில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். கடல் அல்லது தரைவழியாக வேறு நாடுகளில் இருந்து வருவோருக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொவிட்-19 பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தரையிறங்கியதும் அல்லது ஏழு நாள் இல்லத் தனிமையின் போதும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தால், அவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!