
டந்த மே 7 ஆம் தேதி பாகிஸ்தானுடனான மோதலின் போது இந்திய விமானப்படை சில போர் விமானங்களை இழந்ததை இந்திய தலைமை தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான் உறுதிப்படுத்தியுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்க்ரி-லா உரையாடலில் கலந்துகொண்ட அவர், ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார்.
இருப்பினும் ஜெனரல் சவுகான் இழந்த போர் விமானங்களின் சரியான எண்ணிக்கையை குறிப்பிட மறுத்துவிட்டார். "முக்கியமானது என்னவென்றால் - விமானம் வீழ்த்தப்பட்டது என்பதல்ல, ஏன் அவை வீழ்த்தப்பட்டன என்பதே" என்று அவர் கூறினார். மேலும், "ஏன் அவை வீழ்த்தப்பட்டன, என்ன தவறுகள் செய்யப்பட்டன - இவைதான் முக்கியம். எண்ணிக்கைகள் முக்கியமல்ல" என்று அவர் வலியுறுத்தினார். பாகிஸ்தான் ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறுவது "முற்றிலும் தவறானது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இழப்பை உறுதிசெய்த சவுகான்:
நான்கு நாள் மோதலின்போதும் அதற்குப் பின்னரும் நடந்த அதிகாரபூர்வ ஊடக சந்திப்புகளில், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் விமானப்படைத் தளபதி ஏ.கே. பாரதி (வான்வழி செயல்பாடுகளின் தலைமை இயக்குநர்) ஆகியோர் இழப்புகளை மறுக்கவில்லை. "நாங்கள் ஒரு போர்ச் சூழ்நிலையில் இருக்கிறோம், இழப்புகள் போரின் ஒரு பகுதி" என்று பாரதி கூறியிருந்தார். ஆனால், எந்த விவரங்களையும் வெளியிட மறுத்துவிட்டார். இந்த இழப்புகளை உறுதிப்படுத்திய முதல் அதிகாரி ஜெனரல் சவுகான் ஆவார்.
அந்த இழப்புகளில் இருந்து இந்தியா பாடங்களைக் கற்றுக்கொண்டது என்றும், மோதலின்போது அவற்றைச் செயல்படுத்தியது என்றும் தலைமை தளபதி வலியுறுத்தினார். "நல்ல விஷயம் என்னவென்றால், நாங்கள் செய்த தவறுகளைப் புரிந்துகொண்டு, அதைச் சரிசெய்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதே திட்டத்தைச் செயல்படுத்தினோம். அப்போது, எங்கள் அனைத்து விமானங்களும் மீண்டும் நீண்ட தூர இலக்குகளைத் தாக்க முடிந்தது" என்று ஜெனரல் சவுகான் கூறியுள்ளார்.
ரஃபேல் விமானங்கள்:
இந்த மாத தொடக்கத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், மோதலின் முதல் இரவில் தனது நாடு மூன்று பிரெஞ்சு ரஃபேல் விமானங்கள் உட்பட ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியிருந்தார். சிஎன்என், பிபிசி, லெ மொன்ட் மற்றும் பிரான்ஸ் 24 உள்ளிட்ட பல வெளிநாட்டுப் பத்திரிகைகள் ரஃபேல் போர் விமானங்கள் இழந்தது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன, ஆனால் இந்திய விமானப்படை இழந்த மொத்த போர் விமானங்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதை அடுத்து, இந்த மோதல் அரை நூற்றாண்டு காலத்திற்குப் பிறகு அணு ஆயுத அண்டை நாடுகளுக்கிடையே நடந்த மிக மோசமான மோதலாகும். இரு தரப்பினரும் தங்கள் பொதுவான எல்லையில் வான்வழி, ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினர். பாகிஸ்தான் மீது பயங்கரவாதத்தைத் தூண்டியதாக இந்தியா குற்றம் சாட்டியது, ஆனால் இஸ்லாமாபாத் தலைவர்கள் இதில் ஈடுபட்டதை மறுத்தனர்.
அமெரிக்காவின் தலையீடு:
அணு ஆயுதப் போரைத் தவிர்க்க அமெரிக்கா உதவியது என்ற அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கூற்று குறித்து கருத்து தெரிவிக்க ஜெனரல் சவுகான் மறுத்துவிட்டார், ஆனால் இரு தரப்பினரும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருந்தனர் என்று கூறுவதை மறுத்தார். "சாதாரண நடவடிக்கைகளுக்கும் அணுசக்தியை பயன்படுத்துவதற்கும் இடையில் நிறைய இடைவெளி இருப்பதாக நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்" என்று ஜெனரல் சவுகான் கூறினார். நிலைமையைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானுடன் தகவல்தொடர்பு வழிகள் எப்போதும் திறந்தே இருந்தன என்றும், அணு ஆயுதங்களை நாடாமல் தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பல வழிகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.