எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கூட்டம் தள்ளி வைப்பு!

By Manikanda Prabu  |  First Published Dec 5, 2023, 7:53 PM IST

டெல்லியில்  நடைபெறவிருந்த இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது


பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும், மூன்றாவது கூட்டம் செப்டம்பர் மாதம் மும்பையிலும் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் வருகிற 6ஆம் தேதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு அழைப்பு விடுத்து கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

Latest Videos

undefined

இந்த நிலையில், டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 3ஆவது வாரத்தில் அக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் டிசம்பர் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கூட்டணி கட்சித் தலைவர்கள், இந்தியக் கூட்டணியின் தலைவர்களின் கூட்டம் அனைவருக்கும் வசதியான தேதியில் டிசம்பர் மூன்றாவது வாரத்தில் திட்டமிடப்படும்.” என பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால், அவரால் டெல்லி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என ஐக்கிய ஜனதாதளம் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. அதேபோல், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 -  5 மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்களின் இந்த அறிவிப்பு கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியா கூட்டணிக் கூட்டம் தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை புகார்!

மத்தியப்பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தெலங்கானா, மிசோரம் தவிர பிற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸும், மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கமும் வெற்றி பெற்றுள்ளது.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஓரணியில்  திரண்டுள்ள கட்சிகள், மாநில அளவில் எதிரும்புதிருமாக இருக்கக் கூடியவை. எனவே, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு உண்மையான சோதனையாக இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், இந்தியா கூட்டணியானது மக்களவைத் தேர்தலுக்கு மட்டுமே என கூட்டணித் தலைவர்கள்  தெளிவுபடுத்தினர். இருப்பினும், மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளிடையே உரசல் ஏற்பட்டு, இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!