இந்தியா கூட்டணி மும்பை கூட்டம் நிறைவு: அடுத்த கூட்டம் டெல்லியில்?

By Manikanda Prabu  |  First Published Sep 1, 2023, 7:05 PM IST

இந்தியா கூட்டணியின் மும்பை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. அடுத்த கூட்டம் டெல்லியில் நடைபெறும் என தெரிகிறது


பாஜக எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும் நடைபெற்று முடிந்துள்ளது. பெங்களூரு கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31 (நேற்று), செப்டம்பர் 1 (இன்று) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்தியா கூட்டணியில் ஏற்கனவே 26 அரசியல் கட்சிகள் இருந்த நிலையில், சமீபத்தில் இரண்டு புதிய பிராந்திய அமைப்புகள் அக்கூட்டணியில் இணைந்தன. எனவே, மொத்தம் 28 கட்சிகள் மும்பை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.

Tap to resize

Latest Videos

மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டலான கிராண்ட் ஹயாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கடைசி நாளான இன்றைய கூட்டத்தில் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பிரசாரம், சமூக ஊடக குழுக்கள் என மொத்தம் 4 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மக்களிடம் பணம் பறிப்பது தான் மோடி அரசின் நோக்கம்: ராகுல் விளாசல்!

மேலும், 2024 மக்களவைத் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிடுவது, தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிப்பது, தேர்தல் பிரசாரத்தை உடனடியாக தொடங்குவது, ஒன்றுபடும் பாரதம், வெற்றிபெறும் இந்தியா  என்ற கருப்பொருளுடன் பிரசாரங்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நிறைவு பெற்றது. இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் டெல்லியில் நடைபெறும் என தெரிகிறது. கூட்டணியின் அடுத்த கூட்டம் தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, டெல்லி என பதிலளித்தார். இதையடுத்து, எந்த தேதி என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், அதை எப்போது நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த தேதிகளில் நடத்துவோம் என்று பதிலளித்து விட்டு சென்றார்.

click me!