
பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டிருக்கும் குல்பூஷன் ஜாதவை அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசிய நிலையில், இந்தியா – பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தாய்லாந்தில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது இருதரப்பு உறவு, குல்பூஷன் ஜாதவ் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
உறவில் விரிசல்
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வருவதால் இரு நாட்டு உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையதுவுக்கு பாகிஸ்தான் அரசு ராஜ மரியாதை அளித்து வருகிறது. இதேபோன்று காஷ்மீர் பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளை இந்தியவுக்கு எதிராக தூண்டுவிடும் நடவடிக்கையிலும் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உணர்வுப்பூர்வமான பிரச்னை ஒன்று இருநாட்டுக்கும் இடையே குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் எழுந்துள்ளது.
மரண தண்டனை
கடற்படையில் முன்னாள் அதிகாரியாக இருந்த குல்பூஷன் ஜாதவ் ஈரானில் வர்த்தகம் செய்து வந்தார். பாகிஸ்தானுக்கு வர்த்தகம் தொடர்பாக வந்த அவரை, உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அவருக்கு மரண தண்டனையையும் அந்நாட்டு நீதிமன்றம் விதித்தது. இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தை மத்திய அரசு நாடியதால், தற்போது அவரது மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தீர்மானம் நிறைவேற்றம்
இதையடுத்து மத்திய அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக குல்பூஷன் ஜாதவ் தனது குடும்பத்தினரை சந்திக்க பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து பாகிஸ்தான் சென்ற ஜாதவின் மனைவி மற்றும் தாய் ஆகியோர் தரக்குறைவாக நடத்தப்பட்டனர். ஜாதவின் மனைவியுடைய தாலிக்கயிறு ஆபரணங்கள், காலணி உள்ளிட்டவற்றை கழற்றி விட்டு ஒரு விதவையைப் போலத்தான் தன் கணவரை சந்திக்க பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதித்தனர். அதன்பின்னர் முறையற்ற கேள்விகளை கேட்டு, ஜாதவின் குடும்பத்தினரை பாகிஸ்தான் ஊடகங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கின. இதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆக்கப்பூர்வமான சந்திப்பு
இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தாய்லாந்தில் சந்தித்து பேசியுள்ளனர். இதன் விவரம்-
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாசர் கானும் கடந்த மாதம் 27-ந்தேதி தாய்லாந்தில் சந்தித்து பேசியதாக, பாகிஸ்தானை சேர்ந்த தி டான் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது ஆக்கப்பூர்வமான கருத்துகள் இரு தரப்புக்கும் இடையே பரிமாறப்பட்டது. பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டிருக்கும் குல்பூஷன் ஜாதவை அவரது குடும்பத்தினர் கடந்த 25-ந்தேதி இஸ்லாமாபாத்தில் சந்தித்து பேசினர். இந்த சூழலில் அதற்கு அடுத்த 2 நாட்களில் இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்தித்து பேசியுள்ளனர். இதில் இருதரப்பு உறவுகள் குறித்தும் பேசப்பட்டது.