
நாட்டின் 76ஆவது சுதந்திர தின விழா நாளை மறுதினம் கோலாகலமாக எழுச்சியுடன் கொண்டாடப்பட உள்ளது. செங்கோட்டையில் நடைபெற இருக்கும் சுதந்திர தின விழாவில் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி செங்கோட்டை பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியேற்றி உரையாற்றும் பிரதமர் மோடி, அணிவகுப்பு மரியாதையையும் ஏற்கவுள்ளார். இதனையொட்டி, டெல்லி செங்கோட்டையில் இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பிரதமருக்கான இடத்தில் அதிகாரி ஒருவர் நின்று அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். முப்படை வீரர்கள் மிடுக்குடன் அணிவகுத்துச் சென்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் ஆசையை நிறைவேற்றும் முதல்வர் ஸ்டாலின்!
சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதால், டெல்லியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “நேதாஜி சுபாஷ் மார்க், லோதி சாலை, எஸ்.பி. முகர்ஜி மார்க், சாந்தினி சவுக் சாலை, நிஷாத்ராஜ் மார்க், எஸ்பிளனேட் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலை, ராஜ்காட் - ஐ.எஸ்.பி.டி., வரையிலான வெளிவட்டச் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சாலைகளில் இன்று காலை 4:00 மணி முதல் 11:00 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை, ஜூம்மா மசூதி மற்றும் டெல்லி பிரதான ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.” என கூறப்பட்டுள்ளது.
சுதந்திரதின விழா கொண்டாட்டத்தின்போது, அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்கும் பொருட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் சதி வேலைகளில் ஈடுபடாமல் தடுக்க எல்லையில் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.