
வரதட்சணை கொடுமை வழக்கை பெண்கள் சிலர் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் அந்த குற்றச்சாட்டை சரிபார்த்த பிறகே பெண்ணின் கணவர், அல்லது அவர்களின் உறவினர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வரதட்சணை கொடுமை வழக்குகளில் தக்க காரணமின்றியே சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் நிலை பல வழக்குகளில் ஏற்படுகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதார்ஷ் குமார் கோயல் மற்றும் யு.யு.லலித் ஆகியோர் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.
அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு-
வரதட்சணை கொடுமைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதன் நோக்கத்தை அறிந்துள்ளோம். ஆனால் இந்த வழக்கில் அப்பாவிகள் மனித உரிமை மீறலுக்கு ஆளாகவும் வாய்ப்பு உள்ளது. எனவே வரதட்சணை வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு சரிதானா என்பதை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட கமிட்டி ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
அந்த கமிட்டியில் சமூக ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் மனைவியர் இடம் பெறலாம்.
போலீசுக்கோ அல்லது நீதிபதிக்கோ வரும் வரதட்சணை கொடுமை வழக்கை இந்த கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கவேண்டும். அந்த கமிட்டி அந்த குற்றச்சாட்டின் நம்பகத்தன்மை பற்றி ஒரு மாதத்திற்குள் தெரிவிக்கவேண்டும்.
அந்த கமிட்டியின் அறிக்கை வருவதற்கு முன்னதாக குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்யக்கூடாது. அந்த கமிட்டி குற்றச்சாட்டு குறித்து சரிபார்த்து அளிக்கும் அறிக்கைக்கு பிறகே கைது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.