இந்திய கடற்படை முதல் முறையாக இரண்டு விமானம் தாங்கி கப்பல்களுடன் இந்தியப் பெருங்கடல் பகுதியில் மெகா போர்ப் பயிற்சியை நடந்தியுள்ளது.
இந்திய கடற்படை இந்தியப் பெருங்கடல் பகுதியில் பல போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 35 க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் ஆகியவற்றுடன் மெகா போர்ப் பயிற்சியை நடந்தியுள்ளது. இது, மலாக்கா நீரிணை முதல் பாரசீக வளைகுடா வரையிலான பகுதியில் கடல்சார் திறன்களை விரிவுபடுத்துவதற்கான ஒரு தீர்க்கமான செயல்பாடாகக் கருதப்படுகிறது.
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவற்றின் தலைமையிலான இரண்டு போர்க் குழுக்கள் (சிபிஜிக்கள்) முதல் முறையாக மெகா பயிற்சி நடத்தியுள்ளன. ஒரு நாளைக்கு 400 முதல் 500 கடல் மைல்கள் வரை நகரும் திறன் கொண்ட சிபிஜி என்பது போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் கொண்ட மிதக்கும் விமான தளமாகும்.
இந்தப் போர் பயிற்சி பற்றி கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், “இந்த நடவடிக்கை இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும், பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், கூட்டுறவு செயல்பாட்டை வளர்ப்பதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை காட்டுகிறது" என்று கூறுகிறார்.
"நாட்டின் பாதுகாப்பையும் இந்திய பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்தப் போர் பயிற்சி நடத்தப்பட்டது. கடந்த சில வருடங்களில் இந்தி கடற்படை மேற்கொண்ட போர் பயிற்சிகளில் மிகவும் முக்கியமானது. ஒரே நேரத்தில் இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் போர் பயிற்சியில் பங்கெடுத்தது இதுவே முதல் முறை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பிராந்தியங்களில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் கடற்படையின் முயற்சியில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எனவும் கடற்படை செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவும் எதிர்காலத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சிபிஜிக்களை பயன்படுத்தத் தொடங்க உள்ளதாகக் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே லியோனிங் மற்றும் ஷான்டாங் ஆகிய இரண்டு சிபிஜிக்களை சீனா தன்வசம் வைத்திருக்கிறது. 80,000-டன் எடையுள்ள மூன்றாவது சிபிஜியை தயாரித்து வருகிறது. சீனா மொத்தம் 10 சிபிஜிகளை ராணுவத்தில் சேர்க்கும் திட்டத்துடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில், இந்திய விமானப் படையின் சுகோய், ரபேல் போர் விமானங்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து பல மணிநேரம் ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து இந்திய கடற்படையும் மெகா போர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.