
ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், விமான நிலையங்கள், ஓட்டல்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர், குளிர்பானங்கள் , திண்படங்களுக்கு வெவ்வேறு எம்.ஆர்.பி. ரேட் வைத்து விற்பனை செய்ய மத்திய அரசு அதிரடியாக தடை செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த தடை 2018ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.
இதன்படி, ஓட்டலில் விற்பனை செய்யப்படும் ஒரு நிறுவனத்தின் குளிர்பானம், விமானநிலையம் தியேட்டர்களிலும் ஒரே மாதிரி விலையில்தான் விற்பனையாக வேண்டும். இரட்டை எம்.ஆர்.பி. ரேட் வைத்து விற்பனை செய்தால், விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இரட்டை எம்.ஆர்.ரேட் வைத்து விற்பனை ெசய்ய நிறுவனங்களும் அனுமதிக்ககூடாது என மத்தியஅரசு எச்சரிக்கை செய்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநில அரசின் சட்டப்பூர்வ அளவியல் துறை, இது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றதையடுத்து, மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் எடை, தரம், அளவு அனைத்திலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. அந்த சிப்ஸ் பாக்கெட் சாதாரண மளிகைக் கடையில், ஒரு விலையிலும், பெரிய ஷாப்பிங் மால்களில் ஒரு விலையிலும், விமானநிலையத்திலும் ஒரு விலையிலும், தியேட்டரில் ஒருவிலையும் விற்பனை செய்யப்படுவது முரண்பாடாக இருக்கிறது. இதனால், நுகர்வோர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இது தொடர்பாக கோக்ககோலா, பெப்சி, ரெட்புல், யுரேகா போர்ப்ஸ், பிளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் கவனத்துக்கு மஹாராஷ்டிரா அரசு கொண்டு சென்றது.
இதையடுத்து, மத்திய நுகர்வோர் அமைச்சகம் ‘பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள்-2011 சட்டத்தில் கொண்டு வந்த சட்டத்திருத்தத்தின்படி, இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த சட்டம் வரும் 2018ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. அதுவரை உற்பத்தியாளர்களுக்கும், விற்பனையாளர்களும் தங்களை இந்த சட்டத்துக்கு தயார்படுத்திக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதன் நோக்கமே நுகர்வோர்கள் பாதுகாக்க பட வேண்டும் என்பதுதான். இதன்படி, பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களை தனி நபர் ஒருவர் வெவ்வேறு இடத்தில், வெவ்வேறு விலையில் விற்பனை செய்யக்கூடாது.
சினிமா தியேட்டர், ஷாப்பிங் மால்கள், விமானநிலையங்களில் ஒரே பொருளுக்கு பல்வேறு விலைகள் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று நுகர்வோர்கள் தரப்பில் புகார்கள் தரப்பட்டதையடுத்து, இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.