மத்தியப்பிரதேசத்தில் 81 சதவீத எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள் என அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது
மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 சிட்டிங் எம்எல்ஏக்கள் சராசரியாக ரூ.10.76 கோடிக்கு சொத்து வைத்திருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில், ஒரு சாதாரண மனிதனின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,40,583 லட்சம் அல்லது மாதத்திற்கு சுமார் ரூ.11,000 என உள்ளது. ஆனால், தற்போதைய எம்எல்ஏக்களில் 186 (81 சதவீதம்) பேர் கோடீஸ்வரர்கள் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms - ADR) தெரிவித்துள்ளது. 230 சிட்டிங் எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.10.76 கோடி என்றும், இது 2013 மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு எம்எல்ஏவின் ரூ.5.24 கோடி சராசரி மதிப்பை விட 105 சதவீதம் அதிகம் என்றும், 2008 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 230 மொத்த எம்எல்ஏக்களின் ரூ.1.44 கோடி சராசரி சொத்து மதிப்பை விட 647 சதவீதம் என்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கையின்படி, பாஜக எம்.எல்.ஏ.க்கள் 129 பேரில் 107 (83%) பேர் கோடீஸ்வரர்கள். 97 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் 76 (78%) பேர் கோடீஸ்வரர்கள். நான்கு சுயேச்சை எம்எல்ஏக்களில் மூன்று பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்த 2008 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை வெறும் 84 ஆக இருந்தது. இது 2013 தேர்தலில் 92% அதிகரித்து 161 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். 2018 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 186ஆக இருந்தது.
இந்தியாவில் காலியான கனடா தூதரக் கூடாரம்: குடிமக்களுக்கு கனடா எச்சரிக்கை!
ஒப்பீட்டளவில், முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏவுமான சஞ்சய் பதக், தற்போதைய பணக்கார எம்எல்ஏவாக இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.226 கோடியாக உள்ளது. மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத், மொத்தம் ரூ.124 கோடி சொத்துக்களுடன், பணக்கார எம்எல்ஏக்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். 2018 தேர்தலில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ரூ.7 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
மத்திய பிரதேசத்தில் 6 பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏல்.க்கள் குறைந்த சொத்துகளை வைத்துள்ளனர். பந்தனா தொகுதியில் இருந்து பாஜகவின் முதல் முறையாக பழங்குடியின எம்எல்ஏவான ராம் டாங்கூர் ரூ.50,000 மதிப்பிலான சொத்துகள் உள்ளன. மூன்றாவது முறையாக பாஜக எம்எல்ஏவும் அமைச்சருமான உஷா தாக்கூருக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களும் உள்ளன. ஆளும் கட்சியின் பழங்குடியின எம்எல்ஏ ஷரத் கோலுவுக்கு ரூ.8.4 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.