ஒரே நாளில் 12 ஆயிரம் அதிகரிப்பு.. திடீர் உச்சம் தொட்ட கொரோனா..முழு ஊரடங்கு விதித்த அரசு..

By Thanalakshmi VFirst Published Jan 20, 2022, 9:50 PM IST
Highlights

கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 46,387 ஆக உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக அடுத்தடுத்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா மூன்றாம் அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்று கொரோனா ஒரு நாள் பாதிப்பு 34,199 என்று இருந்த நிலையில் இன்று புதிதாக 46,387 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுக்கும் இன்றுக்கும் உள்ள வித்தியாசம் 12,188 ஆக உள்ளது. இதில் அதிகபட்சமாக, கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் 9,720 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல், எர்ணாகுளம் 9,605 பேருக்கும் , கோழிக்கோடு - 4,016 பேருக்கும், திருச்சூர் - 3,627 பேருக்கும், கோட்டயம் - 3,091 பேருக்கும், கொல்லம் - 3,002 பேருக்கும், பாலக்காடு - 2,268 பேருக்கும், மலப்புரம் - 2,259 பேருக்கும், கண்ணூர் - 1,973 பேருக்கும், ஆலப்புழா - 1,926 பேருக்கும், பத்தனம்திட்டா - 1,497 பேருக்கும், இடுக்கி - 1,441 பேருக்கும், காசர்கோடு - 1,135 பேருக்கும் மற்றும் வயநாடு - 827 பேருக்கும் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கேரளத்தில் இன்று ஒரே நாளில் 32 பேர் கொரோனா தொற்றிற்கு உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக கேரளாவில் வரும் 23 மற்றும் 30 தேதிகளில் (அடுத்த இரண்டு ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு விதித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.கொரோனா தொடர்பாக இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரடங்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் கேரளத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படுவதோடு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் தமிழகம் போன்ற பிற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு கேரளத்தில் விதிக்கப்படாது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக மாவட்டங்களில் நோய்ப் பரவலைப் பொறுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படவும், கட்டுப்பாடுகள் குறித்து முடிவெடுக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி அளித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா மூன்றாம் அலை மிக மோசமான நிலையில் உள்ளது என மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் கவலை தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆறு மாநிலங்களுக்கும் மத்தியக் குழுவை அனுப்பி நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!