
புதுடெல்லி, நவ.10-
கார் தயாரிப்பு நிறுவனங்கள், அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் தாங்கள் தயாரிக்கும் கார்களில் என்ன மாதிரியான பாதுகாப்பு விஷயங்களை கடைபிடித்து, தயாரிக்க வேண்டும் என்பது குறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் நேற்று இரவு வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தயாரிக்கப்படும் கார்களில் கண்டிப்பாக ஓட்டுநர், காரில் அமர்ந்திருப்பவர்களின் உயிரைப் பாதுகாக்கும் ஏர்பேக் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும், வாகனத்தை பின்னால் இயக்கும் போது, குழந்தைகள் யாரேனும் நிற்கிறார்களா என்பதை அறியும் சென்சார் கருவி இருக்க வேண்டும், சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்கினால் அறிவுறுத்தும் கருவிகளை கண்டிப்பாக பொருத்தி இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், அனைத்து வாகனங்களிலும் அதிகபட்சமாக 80கி.மீ வேகத்தில் சென்றால் வேக எச்சரிக்கையும், அதற்கும் அதிகமான வேகத்தில் வாகனத்தை இயக்கினால், குரல்ஒலி மூலம் எச்சரிக்கை செய்யும் கருவியும் பொருத்தப்பட வேண்டும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் சர்வதேச சந்தையில் சிறப்பான இடத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்திலும், பாதுகாப்பு விஷயத்தை பலப்படுத்தும் நோக்கிலும் கொண்டு வரப்படுகிறது. இந்த பாதுகாப்பு விஷயங்கள் அனைத்து கார்களிலும் கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும்.
இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்திய அரசின் இந்த உத்தரவை கார் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவர சிறிது கால அவகாசம் கொடுக்கப்படும். சில நிறுவனங்கள் மட்டுமே இந்த பாதுகாப்பு அம்சங்களில் ஒருசிலவற்றை வைத்துள்ளன. ஆனால், இனி அனைத்து கார்களிலும் இந்தபாதுகாப்பு விஷயங்கள் நிச்சயம் இருக்க வேண்டும். பாரத் தேசிய வாகன பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில், இது செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வாகனத்தின் தரம் சர்வதேசஅளவில் மதிப்பிடப்படும். காரில் பயணிப்பவர்கள் விபத்தில் சிக்கினால் அதிகமான காயம் ஏற்படுவதில் இருந்து காக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்படுகிறது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த பாதுகாப்பு அம்சங்கள் அனைத்து நிறுவனங்களின் கார்களிலும் இருப்பது கட்டாயமாக்கப்படும் என்று தெரிவித்தார்.