குஜராத் கனமழை: சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்!

By Manikanda Prabu  |  First Published Jul 23, 2023, 10:46 AM IST

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது


நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், ஹரியாணா, பஞ்சாப், அசாம், டெல்லி ஆகிய வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் கனமழை பெய்யத்தொடங்கியுள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது பல்வேறு இடங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

Tap to resize

Latest Videos

கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலை முழுவதும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஜூனாகத் பகுதியில் பெய்து வரும் கன மழையால் கால்நடைகள், வாகனங்கள் வெள்ளத்தில்அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கோட் மாவட்டத்தின் தோராஜி நகரில் மழைநீர் வெளியேறாமல் சாலையில் தேங்கி நிற்பதால் கார் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் வெள்ள நீரில் மிதக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

குஜராத்தில் மொத்தமுள்ள 206 நீர்த்தேக்கங்களில் 43 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன. அதில், 37 நீர்த்தேக்கங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

துபாய் டு இந்தியா பயணம்.. அதிரடி சலுகையை அறிவித்த எதிஹாட் ஏர்வேஸ் - இதுக்கு டாம் குரூஸ் தான் காரணமா?

குஜராத் மாநிலத்தின் 145 தாலுகாக்களில் குறிப்பாக, சௌராஷ்டிரா-தெற்கு குஜராத் முழுவதும் சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மழை பெய்தது. 22 தாலுகாக்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது. நவ்சாரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 330 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஜூனாகத் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. ஜூனாகத்தில் உள்ள கிர்னார் மலையில் 355 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து மலையிலிருந்து வெளியேறும் நீர் நகரத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு வருகிற 24ஆம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சவுராஷ்டிரா பிராந்தியத்தின் அம்ரேலி மாவட்டத்தில், கனமழை காரணமாக எஸ்டி பேருந்து நிலையம் மற்றும் ராஜ்கோட் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. நவ்சாரி, தெற்கு குஜராத்தில், சனிக்கிழமையன்று 330 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் நவ்சாரி பகுதியில் கடுமையான போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

அகமதாபாத் நகரில் கனமழை காரணமாக விமான நிலையத்தில் தேங்கிய தண்ணீரால் விமானங்களின் வருகை, புறப்பாடு தாமதமடைந்துள்ளது. 12க்கும் மேற்பட்ட விமானங்கள் வருகை, புறப்பாடு தாமதமடைந்துள்ளது. தண்ணீர் தேங்கியுள்ளதால் பல இடங்களில் கார்கள் மிதப்பதும், மக்கள் கூரைகளில் தஞ்சமடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கல்வா ஆற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஜுனாகத் மாவட்ட காவல்துறைத் தலைவர் ரவி தேஜா வாசம் ஷெட்டி, பொதுமக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

click me!