
திருமணத்துக்கு ஏராளமான உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து டாம்பீகமாக செலவு செய்வதைக் குறைக்கும் வகையில், ரூ. 5 லட்சத்துக்கு மேல் செலவு செய்தால், 10 சதவீதம் வரி விதிக்கும் மசோதா மக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த 10 சதவீத வரியை சமூகத்தில் ஏழை பெண்களின் திருமணத்துக்கு அளிக்க வேண்டும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பப்புயாதவ் எம்.பி.யின் மனைவியும், காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான ரஞ்ஜீத் ரஞ்ஜன் என்பவர் “ திருமணம் கட்டாய பதிவுச்சட்டம் மற்றும் வீண்செலவுகளை தடுக்கும் சட்டம் 2016'' என்ற மசோதாவை மக்கள் அவையில் தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து ரஞ்சித் ரஞ்சன் நிருபர்களிடம் கூறுகையில், “ ஒரு குடும்பம் திருமணத்துக்காக ரூ. 5 லட்சத்துக்கு அதிகமாக செலவு செய்யும் பட்சத்தில், அந்த குடும்பத்தினர் தங்களின் செலவு செய்யும் தொகையை அரசுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
அந்த தொகை ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதில் 10 சதவீதம் தொகையை வரியை செலுத்த வேண்டும். இந்த பணம் சமூகத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்களின் திருமணத்துக்கு வழங்கப்படும்.
இன்றைய சூழலில் திருமணம் என்பது, ஒருவரின் பணபலத்தையும், வசதியையும் வெளிக்காட்டநடத்தப்படுகிறது. இதனால், ஏழை குடும்பத்தைச் சேர்தவர்கள் சமூகத்தில் பெரிய அழுத்தத்துக்கு உள்ளாகி, தங்களும் அதிகமாக செலவு செய்ய ஆளாகின்றனர்.
தனிநபர் மசோதாவா கொண்டு வரப்பட்டுள்ள இதன் மூலம் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் தேவையில்லாத செலவுகள் தவிர்க்கப்படும், எளிமையாக நடத்தப்படும் '' எனத் தெரிவித்தார்.