
ரூ.30 லட்சத்துக்கு மேல் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது குறித்து பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் ஆய்வு செய்யப்படும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நேரடி வரி ஆணைய தலைவர் சுஷில்சந்த்ரா கூறியதாவது:-
விசாரணை
நாட்டில் கருப்புபணத்தை தடுப்பதற்காக சமீபத்தில் போலி நிறுவனங்களை ரத்து செய்து, அதன் இயக்குநர்கள் பதவியையும் தடை செய்தது. அவர்களிடம் தற்போதுவருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.1800 கோடி
கணக்கில் வராத பணத்தை பரிவர்த்தனை செய்வதற்காக போலியாக தொடங்கப்பட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவன வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. மேலும் நிறுவனங்களின் 621 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. பினாமி பரிவர்த்தனை சட்டத்தின்படி ரூ.1800 கோடி சொத்து குறித்து விசாரிக்கிறோம்.
ரூ.30 லட்சம்
கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற உதவும் வழிமுறைகளை கண்டுபிடித்து அழித்து வருகிறோம். இதன் மூலம் போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வருமான வரி தாக்கல் விவரங்களில் ரூ.30 லட்சத்துக்கு மேல் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது குறித்து சோதனை செய்ய உள்ளோம்.
பினாமி சட்டம்
அவர்களின் வரி தாக்கலில் சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனை மற்றும் விவரங்கள் பொருந்தவில்லை என்றால் பினாமி சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
வரி நடவடிக்கைகளை மேம்படுத்துவது மற்றும் பினாமி தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் 24மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பிலிருந்தும் விவரங்கள் கிடைத்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.