
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒட்டு மொத்த உலகமும் நூறாண்டுகளில் இல்லாத வகையில் பெருந்தொற்று பெரும் துயரை சந்தித்துவருகிறது. இந்தக் கொடிய பெருந்தொற்றுக்கு உயிரிழந்தோருக்கு என்னுடைய அஞ்சலியை தெரிவித்துகொள்கிறேன். அவர்களுடைய குடும்பத்துக்கு என்னுடைய இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறேன். கொரோனா பெருந்துற்றுக்கு எதிராக உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்டு 15 அன்று இந்தியாவின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் பன்முகத்தன்மையே வலிமையான ஜனநாயகத்துக்கு அடையாளம். வளர்ச்சி என்பது அனைத்தும் உள்ளடக்கிய, உலகம் முழுவதற்கும் உரிய மற்றும் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். தீவிரவாத அச்சுறுத்தல் உலகின் பல பகுதிகளில் அதிகரித்துள்ளது. எனவே, முழு உலகமும் அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனையைக் கொண்டு செல்ல வேண்டும்.
ஆப்கானிஸ்தான் தீவிரவாதம், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியா வளரும் போது உலகமும் வளரும். இந்தியா சீர்திருத்தம் அடையும்போது உலகமும் மாறும்.” என்று பிரதமர் மோடி பேசினார்.