
பீகாரின் தர்பங்கா மாநகராட்சியின் துணை மேயரும், பீகார் காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவின் துணைத் தலைவருமான நசியா ஹசன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால், பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) தொண்டர்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவரது அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் மே 31 அன்று மாலை அரங்கேறியுள்ளது.
தற்போது நீக்கப்பட்ட சமூக ஊடகப் பதிவில், நசியா ஹசன் ஆர்.எஸ்.எஸ்-ஐ பாகிஸ்தானுடன் ஒப்பிட்டிருந்தார். இது இந்து அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பைத் தூண்டியது. இது தொடர்பாக பேட்டி அளித்த ஹசன், தனது பதிவுகளை நீக்க வற்புறுத்தினர் என்றும் ஆனால் தான் எழுதியவற்றில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் - ஆர்.எஸ்.எஸ். ஒப்பீடு:
"என் பதிவு தேச விரோதமானது அல்லது நான் ஒரு துரோகி என்று இவர்கள் நினைத்தால், எனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யுங்கள் அல்லது என்னை தூக்கிலிடுங்கள். ஆனால் நான் பாகிஸ்தானை வெறுப்பது போல, அதே வழியில் ஆர்.எஸ்.எஸ்-ஐயும் வெறுக்கிறேன், இதில் தவறில்லை" என்று அவர் ஆவேசமாக கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து ஹசன் ஒரு புகார் பதிவு செய்துள்ளார். அதில், சமூக ஊடகப் பதிவுகளால் கோபமடைந்த இந்து அமைப்புகள் தன்னை அச்சுறுத்தியதாகவும், தனது அலுவலகத்தை சூறையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார். முதல் தகவல் அறிக்கையின்படி, மாவட்ட பா.ஜ.க தலைவர் ஆதித்யா நாராயண் மன்னா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கும்பலில் இருந்துள்ளனர். கும்பல் ஆயுதம் ஏந்தியிருந்ததாகவும், தனக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுத்ததாகவும் ஹசன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அளிக்க மறுத்த போலீஸ்:
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடமும் காவல்துறையிலும் தெரிவித்ததாகவும், இருப்பினும், தனக்குப் பாதுகாப்பு வழங்காமல் புறக்கணித்துவிட்டதாகவும் ஹசன் குற்றம்சாட்டுகிறார். கும்பலின் தாக்குதலில் காயமடைந்த ஹசனின் உதவியாளர் தேவேந்திர குமார் என்கிற கோலுவும் எழுத்துப்பூர்வ புகாரை காவல்துறையில் அளித்துள்ளார்.
இதற்கிடையில், தனக்கு இன்னும் அச்சுறுத்தும் அழைப்புகள் வந்துகொண்டிருப்பதாக ஹசன் கூறுகிறார். "நான் சொன்னதில் உறுதியாக இருக்கிறேன்; இருப்பினும், கடுமையான போலீஸ் அழுத்தத்தால், நான் பதிவை நீக்க வேண்டியிருந்தது" என்று அவர் தெரிவித்துள்ளார்.