கேரளா மழை வெள்ளம் …. சபரி மலையில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடங்கள் சேதம்… சாலைகளையே காணோம் !!

By Selvanayagam PFirst Published Aug 23, 2018, 8:02 AM IST
Highlights

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட கட்டங்கள் போன்றவை முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டாகவும், கோவிலுக்கு வரும் சாலைகள் முற்றிலும் காணாமல் போயுள்ளதாகவும் தேவசம்போர்டு தலைவர் பத்மநாபர் தெரிவித்துள்ளனார்.

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத  அளவுக்கு பேய் மழை பெய்ததால் அந்த மாநிலமே முற்றிலும் மூழ்கி போயுள்ளது. அதுவும் குறிப்பாக அய்யப்பன் கோவில் அமைந்துள்ள பம்பை நதியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் சென்றது. கிட்டத்தட்ட கோவில் முழுவதும் முற்றிலும் மூழ்கடித்து வெள்ளம் சென்றது.

தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் கோவிலை பார்வையிட்ட தேவசம் போர்டு தலைவர் பத்மநாபர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தங்கி செல்வதற்காக பம்பா நதி அருகே கட்டப்பட்டிருந்த ராமமூர்த்தி மண்டபம், பம்பா நடை பந்தல், தகவல் அறியும் மையம் ஆகிய கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சாஸ்தா கட்டடம், பம்பா காவல் நிலைய கட்டடம், சபரி உணவு விடுதி உள்ளிட்டவை கடும் சேதமடைந்துள்ளன. பம்பா ஆற்றின் வழியாக நடந்து செல்வதற்கான பாதை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதால், புதிய பாதையை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

மகர ஜோதி ஏற்றப்படும் சபரி மலையின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளது. சபரி மலையில் இருந்த 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அங்கு கடுமையான சூழ்நிலை உள்ளதால் பக்தர்கள் யாரும் சபரி மலைக்கு வர வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சிங்க மாத பூஜையை ஒட்டி, இன்று  மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும், வரும் 27ம் தேதி நடை அடைக்கப்படும் என்றும் தேவசம் போர்டு தலைவர் பத்மநாபர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த பூஜைக்காக மட்டும்  கோயில் மேல் சாந்தி உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும் சபரி மலையில் தங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

click me!