அடித்துச் செல்லப்பட்ட முக்கொம்பு மேலணை மதகுகள் !! 7 மதகுகள் அவுட் !!

By Selvanayagam PFirst Published Aug 22, 2018, 10:01 PM IST
Highlights

காவிரி ஆற்றில் ஓடும் கட்டுக்கடங்காத வெள்ளத்தால் திருச்சி முக்கொம்பு மேலணையில் உள்ள 7 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் மேட்டூர் அணைக்கு கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கடந்த மாதம் 23-ந் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை தாண்டியது. பின்னர் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் சரிந்தது.



கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 11-ந் தேதி மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது.

தொடர்ந்து மேட்டூர் அணைக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்ததால் அணை பாதுகாப்பு கருதி கூடுதல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 119.25 அடியாக சரிந்தது.

இதற்கிடையே கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று 80 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு 50 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றிரவு மீண்டும் 120 அடியை தாண்டி நடப்பாண்டில் 3-வது முறையாக அணை நிரம்பியது

இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் 2 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு மேலணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மேலணையில் உள்ள 45 மதகுகளில் 7 மதகுகள்  இன்று மாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதனால், ஆற்றில் சுமார் 90 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. மதகு உடைப்பை அடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது என விவசாயிகளும் பொது மக்களும் கவலையடைந்துள்ள நிலையில், தற்போது நீரை சேமித்து வைத்திருக்கும் முக்கொம்பு மேலணையின் மதகுகள் உடைந்தது விவசாயிகளை பெரும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

click me!