
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீடு ஹைதராபாத்தின் ஸ்ரீநகர் காலணி, வெங்கடேஸ்வரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ளது. இது முதல்வர் ஜெயலலிதாவின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்ட வீடாகும்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த வீட்டிற்கு முறையாக வரி செலுத்தவில்லையென சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக கட்டப்படாமல் விடப்பட்ட தொகை ரூ.82 லட்சத்தைத் தொட்டுள்ளது. இதன் காரணமாக ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் அந்த வீட்டைப் பறிமுதல் செய்துள்ளது.
ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் 2025 – 26ம் ஆண்டு வரி செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமான ஒரே தவணையில் வரி செலுத்தும் திட்டத்தின் அடிப்படையில் சொத்து வரி நிலுவையில் 90% வட்டியை தள்ளுபடி செய்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் சொத்து உரிமையாளர்கள் நிலுவைத் தொகை மற்றும் 10 சதவீத வட்டியை 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதன்படி ரூ.82.91 லட்சம் வரி நிலுவையை ஜெயலலிதாவின் சொத்துக்கு செலுத்த வேண்டியிருந்தது.
இந்த வரி பாக்கியை வசூலிக்க அதிகாரிகள் தரப்பில் பலமுறை முயற்சி மேற்கொண்டபோதும், சம்பந்தப்பட்ட நபர்கள் அதனை செலுத்த முன்வரவில்லையென குற்றம் சாட்டப்படுகிறது. இதனிடையே பிப்ரவரி மாதம் மாநகராட்சி துணை ஆணையர், சொத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோடீஸ் அனுப்பி உள்ளார். ஆனால் நோட்டீஸ் மீது பதில் வராத காரணத்தால் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நிலுவை வரி செலுத்தப்படும் வரை இந்தச் சொத்து ஹைதராபாத் மாநகராட்சி வசம் இருக்குமென்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் 6 முறை முதல்வராக பொறுப்பு வகித்த ஜெயலலிதாவின் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் இரும்பு பெண்மணி, தமிழகத்தில் இருந்தபடியே மோடியா, லேடியா என விவாதத்தை உருவாக்கிய ஜெயலலிதாவின் வீட்டை மீட்க அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.