ஜார்கண்ட் கேபிள் கார் விபத்து.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பரபர வீடியோ...!

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 14, 2022, 12:57 PM IST
ஜார்கண்ட் கேபிள் கார் விபத்து.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பரபர வீடியோ...!

சுருக்கம்

தரையில் இருந்து 1500 அடி உயரத்தில் கண்டறியப்படாத தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது.

ஜார்கண்ட் மாநிலத்தின் டியோகர் கேபிள் கார் விபத்து ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. விபத்துக்குள்ளான கேபிள் காரில் பயணித்த நபர் ஒருவர் தனது செல்போனில் எடுத்த வீடியோவை டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

செல்போன் வீடியோ:

ஒரு நிமிடம் 18 நொடிகள் ஓடும் வீடியோவில் இரு கேபிள் கார்கள் எப்படி மோதிக் கொண்டன என்பதை விளக்கும் பரபர காட்சிகள் இடம்பெற்று உள்ளன. தரையில் இருந்து 1500 அடி உயரத்தில் கண்டறியப்படாத தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது. வீடியோ தொடக்கத்தில் மலையின் மேல் இருந்து கேபிள் கார் மெல்ல கீழே வரும் அழகிய காட்சிகள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. 

வீடியோவில் திரிகுட் மலையின் அழகை கண்டு களிக்க முடிகிறது. வீடியோ காட்சிகளில் திரிகுட் மலைப்பகுதி இயற்கை அழகு, பச்சை பசேலென மிக ரம்மியமாக காட்சியளிக்கிறது. எனினும், அடுத்த சில நொடிகளில் கேபிள் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தாகி விடுகிறது. கேபிள் கார் மோதியதை அடுத்து வீடியோ எடுத்தவர் நிலை தடுமாறி தனது செல்போனை கீழே தவற விடுகிறார். இதனால் அடுத்து என்ன ஆனது என்ற காட்சிகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

உயிரிழப்பு:

திரிகுட் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கேபிள் கார் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். விபத்து காரணமாக கேபிள் கார்களை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதில் பயணம் செய்தவர்கள் அந்தரத்தில் தொங்கிய படி நீண்ட நேரம் காத்திருந்தனர். அதன்பின் உள்ளூர் கிராம மக்களுடன், இந்திய வான்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டன. 

கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த விபத்து ஏற்பட்டது. ஜார்கண்ட் மாநில அரசு விடுத்த கோரிக்கையை அடுத்து இந்திய வான்படை Mi-17 மற்றும் Mi-17 V5 ஹெலிகாப்டர்களை மீட்பு பணிகளுக்கு வழங்கியது. திங்கள் கிழமை மீட்பு பணிகள் துவங்கியது. 766 மீட்டர்கள் நீளம் கொண்ட கேபிள் கார் பாதை மலையின் மேல் சுமார் 392 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கேபிள் காரில் மொத்தம் 25 கேபின்கள் உள்ளன. ஒவ்வொரு கேபினிலும் நான்கு பேர் அமர முடியும். 

பாராட்டு:

கேபிள் கார் விபத்தில் சிக்கியர்களை மீட்கும் பணிகள் நிறைவுற்றதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, மீட்பு பணிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்து  இருக்கிறார். மீட்பு பணிகளில் ஈடுபட்ட வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கானொலி மூலம் கலந்துரையாடினார். 

PREV
click me!

Recommended Stories

ஒரு அமைச்சர் கூட வராததால் மாநிலங்களவை ஒத்திவைப்பு! சபைக்கு அவமானம் என எதிர்க்கட்சிகள் ஆவேசம்!
2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி நிதி ஒதுக்கீடு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!