காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களுக்கு வீட்டுக் காவல் - என்.ஐ.ஏ. அடுத்த அதிரடி...

First Published Jun 5, 2017, 8:16 PM IST
Highlights
Home Security For Naxal Leaders in Kashmir - NIA Next Action


தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ,) அதிகாரிகள் சோதனையைத் தொடர்ந்து, அடுத்த அதிரடி நடவடிக்கையாக காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தடுத்து நிறுத்தப்பட்டு, முக்கியத் தலைவர்கள் வீட்டக்காவலில் வைக்கப்பட்டனர்.

காஷ்மீரில் கூரியத் மாநாடு, அவாமி நடவடிக்கைக்குழு, ஜம்மு–காஷ்மீர் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு பிரிவினைவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த அமைப்புகள் பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கி வரும் லஷ்கர் –இ– தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்திடம் இருந்து நிதி பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிதியை கொண்டு காஷ்மீரில் சட்டவிரோத நடவடிக்கைகளை அரங்கேற்றி வருவதாகவும், பாதுகாப்பு படையினர் மீது கல்வீசுதல், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பொது சொத்துகளுக்கு தீ வைத்தல் போன்ற குற்ற செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் காஷ்மீர், டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் பிரிவினைவாதிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். 2 நாட்கள் இந்த தொடர் சோதனை நீடித்தது. இதில் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

தேசிய புலனாய்வு பிரிவு நடவடிக்கையை அடுத்து பிரிவினைவாதிகள் தரப்பில் நேற்று ஸ்ரீநகரில் ஆலோசனை கூட்டத்திற்கு திட்டமிடப்பட்டது. ஹைதர்போரா என்ற இடத்தில் உள்ள கூரியத் மாநாடு இயக்க தலைவர் சையத் அலி கிலானியின் வீட்டில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த கூட்டத்தை நடத்தவிடாமல் தடுக்க முயன்ற அதிகாரிகள் கிலானியின் வீட்டை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தனர். யாரையும் கிலானி வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததால் ஆலோசனை கூட்டம் நடைபெறவில்லை.

மேலும் மீர்வேஸ் உமர் பரூக் உள்ளிட்ட மற்ற பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். மீர்வேஸ் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக, கூரியத் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் விடுதலைை முன்னணி இயக்கத் தலைவர் மொகமத் யாசின் மாலிக் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு ஸ்ரீநகரில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றில் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

click me!